
அருண் விஜய்க்கு இந்தப் படம் அக்கினி பரீட்சை மாதிரி.
அவர்தான் மொத்தப் பழுவையும் தாங்க வேண்டிய கதை.!
தாங்கி இருக்கிறாரா ,தடுக்கி வீழ்ந்திருக்கிறாரா?
பார்க்கலாம்.!
இயக்குநர் விஜய்யின் படம் என்பதால் தயக்கமில்லாமல் கதைக்குள் வந்திருக்கிறார்,அருண் விஜய்.
ஜெயிலர் பதவியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மகளுக்காக வாழ்கிறவர் .நல்ல கேரக்டர். 
அவசரமாக மகளுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் ,அதுவும் லண்டனில்.!
அங்கே போனால் சந்தர்ப்பங்கள் அவரை சிறைக்குள் தள்ளி விடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள மகளை பார்க்க முடியவில்லை.
அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை அதிரடிகளுடன் தமிழ்ச் சினிமாவின் வழியில் சொல்லிவிட்டார் இயக்குநர்.
இந்த மாதிரியான கதைகளில் வில்லனாக வார்ப்பு செய்யப்படுவது தீவிரவாதம்தான்.!பொரு த்தமுடன் கதைக்குள் பயங்கரவாதிகளும் வருகிறார்கள். இவர்களுக்கும் ,அருண் விஜய்க்கும் இடையில் நடக்கிற சண்டை கதையின் பெரும் பகுதியாக இருக்கிறது।
அமைதியான மனிதராக அறிமுகமாகிற அருண்விஜய், கைதிகள் சிறை உடைத்து தப்ப முயலும்போது காட்டும் ,நேர்மை,அதிரடி அவருக்கே புதியதாக இருக்கும் . சண்டைக் காட்சிகளில் அசுரத்தனம் காட்டுகிறார் . மிரட்டல்.
லண்டன் சிறையதிகாரியாக வருகிறார் எமி ஜாக்சன். இயக்குநர் முன்னர் அறிமுகப் படுத்திய இந்த நடிகையின் அழகு கொள்ளை போய் விட்டது போலும்.!
இவருக்கும் ஆக்சன் காட்சிகள் உண்டு. 
செவிலியர் வேடத்தில் வருகிறார் நிமிஷா சஜயன் . முக்கியவேடம். மனது ஆட்கொள்ளுகிறது.
சர்தார் வேடத்தில் நடித்திருப்பவர் நாசர் மகன் அபிஹசன்,சுலபமாக கண்டு பிடிக்க முடியாத தோற்றம்.. சிறப்பான நடிப்பு. !
வில்லனாக வரும் பரத் போபண்ணா,மகளாக வரும் சிறுமி இயல், மற்றும் விரஜ், ஜேசன் ஷா ஆகியோர் சரியான தேர்வு.
ஒளிப்பதிவு சந்தீப் கே.விஜயனுக்கு இந்தப்படம் சோதனைக்களம் என்று சொல்லலாம். இவரது திறமையினால் கதைக்கு பலம் சேர்ந்திருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் இசை. . பின்னணி இசையில் பின்னியிருக்கிறார்.
இயக்குநர் விஜய்யின் ‘மிஷன் சாப்டர் ‘,இவரது புதுப் பாதை. நம்பிக்கை தருகிறது ,பயணிக்கலாம்.
–தேவிமணி












