‘பென்ஸ் மீடியா’ – ‘அவ்னி மூவிஸ்’ தயாரித்து, அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம், டபுள் ஆக்குபன்ஸி. இதில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், பக்ஸ் பகவதி பெருமாள், விச்சு விஸ்வநாத், போஸ்வெங்கட், வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்க, இசையமைத்துள்ளார், சாம் சி எஸ்.
திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, போஸ் வெங்கட் – வினோதினி தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், அந்த குழந்தை பேச்சு மூச்சில்லாமல் இருப்பதால், உயிர் பிழைக்க கடவுளிடம் வேண்டுகிறார், போஸ் வெங்கெட். அதன் பலனாக போன குழந்தை உயிர் திரும்ப வருகிறது. இரட்டிப்பாக. அதாவது 12 மணி நேரம் ஆணாகவும், அடுத்த 12 மணி நேரம் பெண்ணாகவும் உடலமைப்பு மாறி விடுகிறது. இதனால், முதலில் அதிர்ச்சி அடையும் பெற்றோர்கள் குழந்தையின் சிறுவயதிலிருந்தே அதை ஏற்றுக் கொள்வதற்கும், அதன்படி நடந்து கொள்ளவும் பழக்கப்படுத்தி விடுகிறார்கள். ஒரு உயிரில் பிறந்த இரண்டு உடல்களாக சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ். இந்த இருவரும் தான் ஆண், பெண்ணாகவும்… பெண், ஆணாகவும்… மாறிக் கொள்கிறார்கள். வாலிபவ பருவத்தை அடைந்த இருவருக்கும் காதல் உருவாகிறது. சந்தோஷ், சம்யுக்தா விஸ்வநாதன் காதலர்களாகி விட, வினோத் கிஷன், ரேஷ்மா வெங்கடேஷூம் காதலர்களாகி விடுகின்றனர். ஒரு உயிரில் இரண்டு உடல்கள் உருமாறுவதை கவனிக்கும் டாக்டர் பக்ஸ் பகவதி பெருமாள், அவர்களை தனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி அதன் மூலம் பெரு பணம் ஈட்ட முயற்சிக்கிறார். காதல் என்ன ஆனது? டாக்டரின் முயற்சி என்ன ஆனது? என்பது தான், ‘டபுள் ஆக்குபன்ஸி’ படத்தின் இன்ட்ரஸ்ட்டிங்கான கதை.

கதையை இன்ட்ரஸ்டிங்காக கொடுத்த அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி, அதற்கான திரைக்கதையை இன்ட்ரஸ்டிங்காக கொடுக்க முடியவில்லை. இது ஒரு பக்கா, அடல்ட் காமெடி சைன்டிஃபிக் கன்டென்ட். ஆனால், அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளமல், சயின்ஸ் ஃபிக்ஷனாக சொல்வதா, சூப்பர் நேச்சுரல் பாணியில் சொல்வதா என பெருங்குழப்பத்தில் திரைக்கதை செல்கிறது. விழுந்து விழுந்து சிரிக்க வேண்டிய தருணங்கள் கதையம்சத்தில் இருக்கிறது. அதை தவறவிட்ட இயக்குநர் விடிவி கணேஷை வைத்துக்கொண்டு கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். படத்தின் முதல் பகுதி கொஞ்சம் ரசிக்கும்படி செல்கிறது. இரண்டாம் பகுதி, முதல் பகுதி போல் இல்லை. க்ளைமாக்ஸ் பலவீனம்.
கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் சந்தோஷுக்கு, கதாநாயகனுக்குரிய அனைத்து தகுதிகளும் இருப்பதோடு நன்றாகவும் நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் சிறப்பான கவனத்தை ஈர்க்கிறார். சந்தோஷின் காதலியாக நடித்திருக்கும் சக்யுக்தா விஸ்வநாதன், குறை சொல்லமுடியாத நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். வினோத் கிஷனை காதலிக்கும் ரேஷ்மா வெங்கடேஷுக்கு சற்று அழுத்தமான் கதாபாத்திரம். அலட்டிக்கொள்ளாமல் நடித்து, கவனம் பெறுகிறார். பல படங்களில் கொடூரமான வில்லனாக பார்த்த வினோத் கிஷன், இந்தப்படத்தில் அனைவரையும் எளிதில் ஈர்க்கும் வண்ணம் நடித்திருக்கிறார். விடிவி கணேஷ், சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். போஸ் வெங்கட், வினோதினி, பகவதி பெருமாள், விச்சு விஸ்வநாத் ஆகியோரும் கவனம் பெறுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவும், சாம்.சி.எஸ் இசையும் படத்தின் பலமாக இருக்கிறது.
மொத்தத்தில், ‘டபுள் ஆக்குபன்ஸி’ இளைஞர்களை கவரும்!












