‘ஆட்டி’, இத்திரைப்படத்தில் இசக்கி கார்வண்ணன், அபி நட்சத்திரா, காதல் சுகுமார், சௌந்தர் , செல்வகுமார், பிரவீன் பழனிச்சாமி , கரன் சக்கரவர்த்தி, ஆலன் கிருஷ்ணா, சிந்து குமரேசன் , ஆனந்த் சௌந்தரராஜன், நேசன், குயிலி நாச்சியார் ,உதயா சுமதி, நிலா, சுமித்ரா தேவி, ஆஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைக்கதை திருமுருகன், இயக்கம் டி. கிட்டு. ஒளிப்பதிவு சிபி சதாசிவம். இசை தீசன்.
போக்குவரத்தும், தொலைபேசி வசதிகளும் மிகக் குறைந்த காலக் கட்டமான 1960களில் கதை நிகழ்கிறது. அடிப்படை வசதிகள் அறவே அற்ற ஒரு மலைக்கிராமம். அபி நட்சத்திரா அந்த கிராமத்திலேயே கொஞ்சம் படித்தவர். என் ஜி ஓக்களால் நடத்தப்பட்டு வரும் சிறிய பள்ளிக்கு ஆசிரியர் வராத நேரங்களில், இவரது சொந்த அக்கறையின் பேரில் அங்குள்ள சிறுவர், சிறுமிகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுத்து வருகிறார். இந்நிலையில், அந்த பள்ளிக்கு புதிதாக ஆசிரியர் பிரவீன் பழனிச்சாமி வருகிறார். அதே நேரத்தில், அந்த ஊருக்கு இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் வருகிறார்.
இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன், அந்த மலைக்கிராமத்தைச் சுற்றி வரும்போது இல மர்மமான செயல்கள் நடந்து வருவதை கணிக்கிறார். அதன்பிறகு ஒரு சில நாட்களில், பள்ளிக்கு புதிதாக ஆசிரியர் பிரவீன் பழனிச்சாமி மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இதை விசாரணை செய்யும் இசக்கி கார்வண்ணன், நூற்றாண்டு காலங்களாக நடந்துவரும் குற்றங்களையும், அதை தடுத்து தண்டனை கொடுக்கும் குழுவினரையும் கண்டுபிடிக்கிறார். இது தான் ‘ஆட்டி’ படத்தின் கதை.
ஒரு சின்ன பட்ஜெட். அந்த பட்ஜெட்டிற்குள் அடங்கிய லொகேஷன். குறைந்த அளவிலான நடிகர்கள். இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்து மீறல்கள் மலிந்திருப்பதைப் போலவே, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரும் நடந்துள்ளது. அது, அந்தக் காலக்கட்டத்தில் எப்படி தடுக்கப்பட்டது என்பதையும், குல தெய்வங்கள் பற்றியும் மிரட்டலான ஒரு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள், படக்குழுவினர். ஆனால் அது ரசிகர்களிடம் சென்றடையவில்லை. காரணம், எந்த சுவாரசியமும் இல்லாத திரைக்கதை.
மலைவாழ் பழங்குடி பெண்ணாக அபி நட்சத்திரா, இன்ஸ்பெக்டராக இயக்குநர் இசக்கி கார்வண்ணன், கான்ஸ்டபிளாக காதல் சுகுமார். இவர்களைத்தவிர மற்ற நடிகர், நடிகைகள் ரசிகர்களுக்கு பரிச்சையம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
பெண்கள் கல்வி, வீரம், அறிவு போன்றவற்றில் வல்லவர்களாக இருந்துள்ளனர். என ஆவணமாக சொல்ல முயற்சித்துள்ளனர். ‘’விடியலை விரும்பாத விடியல் அரசன்’’ போன்ற வசனமும் காட்சிகளும், திராவிட கருத்துகளுக்கு எதிராக, கவனிக்கத்தக்க வகையில் இருக்கிறது.
சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவும், தீசனின் இசையும் ஓகே!
ஆட்டி – வணிக நோக்கில்லாத ஒரு படைப்பு!












