ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில் குமார், மிஷ்கின், சாண்டி, யோகிபாபு உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம் ‘பரிமளா அண்ட் கோ’. எழுதி இயக்கியுள்ளார், பாண்டிராஜ்.
யோகிபாபுவின் வீட்டில் குடித்தனம் இருக்கும் ஜெயராம், ஊர்வசி தம்பதியினருக்கு சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில் குமார் என இரண்டு மகள்கள். நடுத்தரமான குடும்பம். சந்தோஷமான வாழ்க்கை. இவர்களது சந்தோஷமான வாழ்க்கையை கெடுக்கும் வகையில் வந்து சேர்கிறார், ரௌடி சாண்டி. அவர் அனந்திகா சனில் குமாரை காதலிப்பதாகக்கூறி தொல்லை கொடுத்து வருகிறார். ஒரு கட்டத்தில் அவரின் தொல்லை அதிகரிக்கிறது. அதனால், சாண்டியை கொலை செய்ய ஜெயராம் குடும்பம் முடிவு செய்கிறது. இதற்கிடையே சாண்டி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை தேடி இன்ஸ்பெக்டர் மிஷ்கின் ஜெயராம் குடும்பத்திடம் விசாரணை நடத்துகிறார். சாண்டியை கொலை செய்தது யார்? என்பதை காமெடியாக சொல்வது தான் ‘பரிமளா அண்ட் கோ’.
டார்க் காமெடி வகையிலான ஒரு க்ரைம் ட்ராமா தான் இந்தப்படம். ஜெயராம் – ஊர்வசி ஜோடியின் கலக்கலான காமெடிகள் ஆங்காங்கே சிரிப்பு மூட்டுகிறது. அவர்களது இயல்பான நடிப்பும், வசனங்களும் திரையரங்கை தூங்கவிடாமல் வைத்திருக்கிறது. ஒரு சில காட்சிகள் கடியாகவும் இருக்கிறது.
இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின், ரசிகர்களை எளிதில் ஈர்த்து விடுகிறார். அவரது தனித்துவமான நடிப்பு ரசிக்க வைக்கிறது. ரௌடியாக சாண்டி. பார்த்தாலே எரிச்சல் ஊட்டும் பாவனைகளுடன் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சகோதரிகளாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோரது குறும்புத்தனமான சேட்டைகள் ரசிக்கும்படி இருக்கிறது. இருவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். சப் இன்ஸ்பெக்டராக ஜி.கே.எம்.தமிழ்குமரன், மற்றும் காயத்ரி, யோகி பாபு, பூர்ணிமா ரவி என அனைவருமே குறிப்பிடத்தகுந்த வகையில் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் தமிழகத்தில் மிதமிஞ்சியிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களையும், போதை கலாச்சாரத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறார், இயக்குநர் பாண்டிராஜ். ஒரு சில காட்சிகளில் போதைக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார். அதை தவிர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
மொத்தத்தில், ‘பரிமளா அண்ட் கோ’ கொஞ்சம் சிரிப்புடன் கூடிய சஸ்பென்ஸ் க்ரைம் ட்ராமா!












