தனுசின் திரையுலக வாழ்கையில்,முக்கியதிருப்பு முனையாக அமைந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2ஆம் பாகம் என்பதாலும் ,சௌந்தர்யா ரஜினிகாந்தின் இயக்கம் என்பதாலும் ஏகப்பட்ட எதிர் பார்ப்புகள் நம்மிடம் ஒட்டிக்கொள்கிறது.முதல் பாகத்தில் காதலித்து வந்த தனுஷ் – அமாலா பால் இந்த பாகத்தில் கணவன் – மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். தனுஷ் பணிபுரியும் கம்பெனிக்கு, அவரின் திறமை காரணமாக அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கிறது.புதிய மெகா புராஜெக்ட் ஒன்றை கைப்பற்றுவதில் தனுஷுக்கும், மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் கஜோலுக்குமிடையே மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் மெகா புராஜெக்ட் தனுஷ் வசம் வருகிறது. இதையடுத்து தனுசிடம் ஏற்பட்ட தோல்வியை தாங்கி கொள்ள முடியாத கஜோல், அதன்பிறகு தனுஷ் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் முட்டுக்கட்டையாக நிற்கிறார். , மீண்டும் தனுசை,‘வேலையில்லா பட்டதாரி’யாக்குகிறார் கஜோல். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே இந்த 2ஆம் பாகத்தின் கதைக்களம்!
மின்சார கனவு படத்தையடுத்து சுமார் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடித்திருக்கும் கஜோல், ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில்,வில்லத்தனத்தில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, தன்னை மிஞ்ச யாரும் இல்லை என மிரள வைத்திருக்கிறார். மன்னன் விஜயசாந்தி,படையப்பா நீலாம்பரி வரிசையில் கஜோலும் இடம் பிடித்துள்ளார். தனுசின் பங்களிப்புதான் படத்திற்கு மிகப்பெரிய பலம். ரகுவரனாக அவரின் பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்பு, ஸ்டைலிஷான மேனரிசங்கள் என அனைத்திலும் மீண்டும் அவர் அடித்த பந்து மைதானத்தை தாண்டியே பறந்திருக்கிறது. கதை, வசனகர்த்தாவாகவும் ஜெயித்திருக்கிறார். விவேக். சமுத்திரக்கனி இருவரும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரிஷிகேஷ், மீரா கிருஷ்ணன், ரிது வர்மா ஆகியோரும் தங்களது பங்கினை சிறப்பாகவே செய்துள்ளனர். சவுந்தர்யா ரஜினிகாந்த் ஒரு சிறந்த இயக்குனராக, கூட்டுக் குடும்பம், அன்பு, பாசம், காதல், அக்கறை, பிரச்சனை எல்லாம் சேர்ந்தது தான் வாழ்க்கை என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார்.அதே சமயம், 2ஆம் பாதி காட்சிகளும், கிளைமாக்சும் பலவீனமாக படைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டும் கட்டாயமும் உள்ளது.. முதல் பாகத்தில், அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. ஆனால், ‘விஐபி 2’வில் ஷான் ரோல்டனின் பாடல்கள் படத்திற்கு பெரிய மைனஸ்.பின்னணி இசையிலும் பின் தங்கி விடுகிறார். சமீர் தாஹிரின் ஒளிப்பதிவு பாராட்டும் படி உள்ளது. மொத்தத்தில் `வேலையில்லா பட்டதாரி 2′ பொழுதுபோக்கு படம்!.