“ஓப்பனிங் சீன்ல பழைய காமடி சீனா ஞாபகத்துக்கு வருது?, வரக்கூடாதே ” என வினாடி நேரத்தில் மொத்த மனதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறார் தினேஷ். அப்பாவி மனுசனா இருக்கான்.இவனாவது கொலை பண்றதாவது என அடுத்தடுத்து வரும் காட்சிகளும் நம்மை மாற்றிக்கொண்டே போகின்றன! இடைவேளை பிளாக்கில்தான் ‘என்னவோ நடந்திருக்கு,அது இப்படி இருக்குமா அல்லது அப்படி இருக்குமா’ என்கிற எதிர்பார்ப்பு கிள்ளல். உண்மையைச்சொன்னால் ஒரு இடிதாங்கியின் கதை.
அப்படி அசத்தி இருக்கிறோம் இப்படி உருக வைத்திருக்கிறோம் என்கிற பில்டப்புகளால் ஏமாறிப் போயிருந்த நமக்கு இந்த குப்பைக்கதை கோபுரமாக தெரிகிறது.
தினேஷ் சென்னை மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளி.கூவம் கரை அருகில் வீடு. மனிஷா நல்ல நிறம்.வசதியில் தினேசை விஞ்சியவர் என சொல்ல முடியாது.வாழ்ந்த இடம்தான் வால்பாறை.இவர்களுக்கிடையில் நடந்த திருமணத்துக்கு அடையாளம் ஒரு குழந்தை.ஆனால் அந்த குழந்தையினால் மட்டும் அவளால் நிறைவான வாழ்க்கை வாழமுடியவில்லை. தடம் மாறுகிறாள்.
தாமரை நூலை தாம்புக்கயிறாக நினைத்த தவறு புரிகிறது.பாம்புடன் வாழ்ந்தது கடிபட்ட பின்னர்தான் வலிக்கிறது.
பாவங்களுக்கேற்ப முகத்தை மாற்றுகிற டான்ஸ் மாஸ்டர் தினேசுக்கு நடிப்பு சொல்லித் தரவேண்டியதில்லை.தானாகவே வருகிறது.வாழ்ந்திருக்கிறார் மனிதர், இதைப்போன்ற கனமான கேரக்டர்களுக்கு திலகங்களைத் தேடவேண்டாம் தினேஷிடம் சென்றால் போதும்.
மனிஷா யாதவ் சரியான தேர்வு. காலமும்சூழலும் ஒரு பெண்ணை எவ்வளவு சுலபமாக மாற்றிவிடும் என்பதற்கு சரியான உதாரணமாக வாழ்ந்திருக்கிறார். நாகரீக உலகில் மேல்தட்டு மட்டுமல்ல கீழ்த்தட்டுக்கும் அதே உணர்வுதான் ஒரே நோக்கம்தான்.துணிந்து சொல்லி இருக்கிறார் இயக்குநர் காளி.ரங்கசாமி.
மறைந்திருந்து பார்ப்பதைப்போன்ற உணர்வுடன் காட்சிகளை கடக்கிறோம் என்றால் அது ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் கைஜாலம்
யோகி பாபு தவிர்க்க முடியாத மனிதர்,
மனிஷாவை ஏமாற்றிய மாத்யூதான் கொலை செய்யப்படவேண்டியவர் என்பது தர்க்க ரீதியான வாதமாக இருக்கலாம். ஆனால் கொல்லப்படுபவர் யார்? நல்ல தீர்வு!
பார்க்கவேண்டிய படம். CINEMA MURASAM RATING 3.5/5












