உப்புக்கல் பெறாத விஷயத்துக்கு ஊர் கூடி வம்புகளை வார்ப்பார்கள்.
‘ நீ கடவுள் மறுப்பாளன் ஆயிற்றே எப்படி வைதீக நம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்கலாம்’ என்று கவிப்பேரரசு வைரமுத்துவை நோக்கி கேள்விகள் எழுகின்றன.
தமிழகத்தில் காலம் காலமாக பின்பற்றுகிற மரபுகள் சில இருக்கின்றன. அவை வெறும் நம்பிக்கையாகவும் இருக்கலாம்,பகுத்தறிவுக்கு ஒவ்வாதவையாகவும் இருக்கலாம்.
பகுத்தறிவு சிந்தனைகள் விதை போடாத காலத்துக்கு முன்பிருந்தே அல்லது அவை தமிழகத்துக்கு அறிமுகம் காலத்துக்கு முன்பே தமிழன் பின்பற்றி வரும் நம்பிக்கைகள் காலத்தால் அழிக்க முடியாதவை இன்னும் இருக்கின்றன .
தந்தை தாய் இறந்தால் மகன் செய்யும் காரியங்கள் பல இருக்கின்றன.
புதைக்கப்பட்ட பின்னர் நடுகல் நிறுவினர் நமது முப்பாட்டன்கள். இன்று சிறு கல்லை நட்டு வைத்து விட்டு சந்தனம் சாற்றி பூ போட்டு வருவதை பார்க்கலாம் .
அதை போல இரண்டாம் நாள் பால் தெளித்து நவதானியங்களை தெளித்து விட்டு வருகிறார்கள். தந்தைக்கு மகன் செய்யும் கடமை. அவன் மனதுக்கு நிறைவு.
” நான் எனது தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்து விட்டேன்”என்கிற நிம்மதி.
மொட்டை அடிக்க வேண்டியதுதானே?
அது மகனின் மனம் சார்ந்தது. அவனது மனதினைஅல்லது உரிமையைக் கேள்வி கேட்கும் அதிகாரம் நமக்கில்லை.
வைரமுத்து விரும்பினார்,அவரது பிள்ளைகள் தாத்தனுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யவேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். ஒரு தந்தையின் கடமைச்செய்திருக்கிறார் .இதில் என்ன தவறு?
தனது தகப்பனுக்குச் செய்யவேண்டியதை ஞானத் தகப்பனுக்கும் செய்திருக்கிறார். இதில் எங்கே பகுத்தறிவு பங்கப்பட்டிருக்கிறது? தமிழர்களைக் கேளுங்கள் .தக்க பதில் செல்வார்கள்.