பாபநாசம் படம் வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை இன்று கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
1,பாபநாசம் படத்தை தமிழில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? கமல்; நல்லதைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம்தான். அப்பாவுக்கு சில நல்ல குணங்கள் இருக்கும். அண்ணனிடம் சில குணங்கள் இருக்கும். அதையெல்லாம் செய்து பார்க்கணும்னு ஆசைதான். இந்த படத்தில் கவுதமியை நடிக்க வைத்ததற்கு நான் காரணமில்லை. இயக்குனர் ஜீத்து ஜோசப்தான் கவுதமி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றார். நானும் கவுதமியிடம் பரிந்துரை செய்தபோது, ஒருவிதமான சங்கோஜமும் வெட்கமும் கூட இருந்தது. அதன் பிறகு கூட கவுதமியிடம் நீ நடிக்கிறதா பத்தி என்ன சொல்றே! ன்னு கேட்க,அவரும் நீங்க என்ன சொல்றீங்கன்னு கேட்க இப்படியே எங்க வீட்டுல ஒரு விளையாட்டே நடந்து கொண்டிருந்தது. அப்புறம் படத்தின் தயாரிப்பாளர்,எழுத்தாளர் ஜெய மோகன் ஆகியோர் மிகவும் வற்புறுத்திய போது,நிறைய தயக்கத்திற்குப் பிறகு ஒப்புக்கொண்டார். அதன் பிறகு இது என்னுடைய சுயநல முடிவாக அமையாது என தெரிந்ததால் நானும் ஒப்புக்கொண்டேன்! ஏழை படும் பாடு என்று ஒரு படம். அந்தப் படத்தை அப்படியே தமிழில் எடுத்தார்கள். அந்த பாதிப்பில் எடுக்கப்பட்டதுதான் மகாநதி. ஏழை படும் பாடு படத்தையே நான் இந்த காலத்தில் எடுக்க நினைத்ததால் உருவான படம்தான் மகாநதி. ஒரு படத்தில் வேட்டி கட்டி நடித்துவிட்டு, அடுத்த படத்திலும் வேட்டி கட்டும்போது அதே கதையாகதான் இருக்கும் என்று நினைக்கக் கூடாது.
2,நிஜ வாழ்க்கையில் இரண்டு மகள்களின் அப்பாவாக இருக்கும்போது அதே பாத்திரத்தில் நீங்கள் நடித்த் தருணத்தில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
கமல்; என்னுடைய குடும்பத்தில் நான்தான் தலைவன் என்கிற பொறுப்பை ஏற்றுக் கொள்வேன் என்று அடம் பிடிக்கவில்லை. நான் தலைவன் மட்டுமில்லை. தொண்டனும் கூட. ஐந்து வருடங்களுக்கு அரசியல் தலைமை மாறுவதுபோல அந்தந்த சமயத்திற்கு ஏற்ப தலைமையை விஷயம் தெரிந்தவர்களிடம் மாற்றி கொடுக்க வேண்டியது அவசியம். சமைக்கத் தெரிந்தவர்களிடம் சமையல் வேலையை ஒப்படைப்பது, சாப்பிடுபவர்களைக் கேட்டுக் கொடுக்க வேண்டியதில்லை.
3,,பாபநாசம் படத்தை வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதி கதைகளமாக காட்டியிருக்கலாமே?
கமல்; காட்டியிருக்கலாம். தேவர் மகன் படத்தை கோயம்புத்தூர் பகுதிக் கதையாகத்தான் காட்ட நினைத்தோம். நிஜமாகவே அங்குதான் படம் பிடிக்கப்பட்டது. அதுவேறு விஷயம். வசூல்ராஜா படத்தையே கூட அப்படி எடுத்திருக்கலாம். அந்த நேரத்தில் தோன்றிய முடிவுதான் திருநெல்வேலி பகுதியாக வந்தது.
4,எஸ்.எஸ்.ஆர் போன்ற மூத்த நடிகர்கள் கொள்கை பிடிப்போடு இருந்தார்கள். கடவுள் வேடங்களில் நடிப்பதில்லை. நீங்கள் உங்கள் கொள்கையைத் தளர்த்திக்கொண்டது போல் தெரிகிறதே ?
கமல்; என்னைப் பொருத்தவரை என்னுடைய கொள்கை அந்த கதாபாத்திரத்தில் இழையோடுமே தவிர, பாத்திரத்தை அமுக்கி விடாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜாதியைப் போற்றும் ஒரு படத்தை நான் எடுக்கவே மாட்டேன். அது ஜாதின் பெயரால் வரும் படம் என்றாலும்கூட. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியும் செத்துட்டாரு. அதைப் பாடிய சின்ன பாப்பாக்களும் கொள்ளு பாட்டியாகிட்டாங்க. இன்னும் ஜாதியை பிடிச்சுகிட்டு அலையணுமா என்பாதாய் வருமே தவிர ஜாதியை தூக்கிப் பிடிக்காது.
5,திருநெல்வேலி வட்டார வழக்கை எப்படிக் கற்றுக்கொண்டீர்கள் ?
கமல்; நல்ல நண்பர்களே எனக்கு வாத்தியாராக அமைந்து விட்டபடியால் இந்தப் படம், அந்த வட்டார வழக்கு சாத்தியமானது.
6, சமீபத்தில் நாங்குநேரி சென்று மடாதிபதியைச் சந்தித்தீர்களே ?
கமல்; அவர் அங்கு படப்பிடிப்பிற்கு அனுமதியளித்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமை. அதோடு நான் அங்கு ஒரு விருந்தினராகதான் போயிருந்தேன். அது என் சொந்த வீடு கிடையாது. அங்கு என்னுடைய கொள்கையைக் காட்டப் போகவில்லை. தவிர மதம் பிடிக்காதே, தவிர மனிதம் எனக்குப் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரை எல்லோரையும் மனிதர்களாகதான் பார்க்கிறேன்.
7, பாலியல் குற்றங்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறதே இதை கடும் தண்டணைகள் மூலம் தடுக்கலாமா?
கமல்: இதை தடுக்கவேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. குப்பையை போடக்கூடாது என்பதைச் சொல்ல அந்த விஷயத்தை பிரதமர் கையிலெடுக்க வேண்டியிருக்கு. காரணம் நாம் நம் கடமையை செய்யவில்லையென்பதால்தான். இதை அவர் சொல்லிதான் நாம் செய்யவேண்டும் என்று நினைத்திருக்கக் கூடாது. ஹரப்பா, மொஹஞ்சதாரோவில் குப்பைத் தொட்டி வைத்த நம் பரம்பரை அதைக் கூட மறந்துவிட்டது பெரிய சோகம்தான். ஒரு பெண் நள்ளிரவில் நகை அணிந்து கூட அல்ல, தன்னுடைய பாய் பிரண்டோடு போனதற்கே பஸ்ஸில் வைத்து கற்பழிக்கிறார்கள் என்றால் காந்தி சொன்ன சுதந்திரம் இன்னும் வரவே இல்லை என்றுதானே அர்த்தம்.. கடும் தன்டணை என்றால், தூக்கு தண்டனைக்கு முழு எதிரானவன். தூக்குத் தண்டணை என்பது மறுபடியும் திருத்தி எழுத முடியாத தீர்ப்பு. அப்படி திருத்த முடியாத தீர்ப்பை யாரும் இனிமேல் கொடுக்கக் கூடாது.
8, உங்கள் நண்பர்களான இலக்கியவாதிகள் தொ.மு பரமசிவம், புவியரசு போன்றவர்களின் சிந்தனைகளைப் படமாக்க முயற்சிக்கவில்லையே?
கமல்; விருமாண்டி என்கிற படம் எடுப்பதற்கு முக்கிய காரணம் தொ.மு. பரமசிவம்தான். மக்களின் தெய்வங்கள் என்ற அவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதே அந்தப் படம். மக்களின் தெய்வங்களைப் பறித்தெடுக்கும் உரிமையாருக்கும் கிடையாது. அதே போல் இன்னொரு மதாச்சாரிக்கும் அந்த உரிமை கிடையாது. அவன் முனீஸ்வரனை கும்பிடுறான்னு சொல்லக்கூடாது… அப்படின்னா மொத்தமா நம்பிக்கை இருக்கக் கூடாது. அய்யர் வாழைப் பழம் வெச்சு கும்ம்பிட்டால், அவன் சுருட்டும் சாராயமும் வெச்சு கும்பிடுவான். இதைத் தவறென்று சொல்லக் கூடாது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி உருகும் கண்ணப்ப நாயனார் பக்தியை ஒத்துகிட்டால் இந்த பக்தியையும் ஒத்துகிட்டுதான் ஆகணும்! இவ்வாறு அவர் கூறினார்.