கிறிஸ்துமஸ் கவுபான் என்கிற ஹாலிவுட் படத்தில் ஆங்கில நடிகையுடன் நடித்திருக்கிற நம்ம ஊர் மாவீரன் நெப்போலியன் சென்னை வந்திருந்தார். செய்தியாளர்களுடன் மனம் விட்டுப் பேசினார்.
“நாங்கள் திரை உலகில் வாழ்ந்த காலம் பொற்காலம்னுதான் சொல்வேன். பக்கத்து செட்ல சீனியர்கள் இருந்தால் அங்க போய் அவர்களைப் பார்த்து வாழ்த்துகளை பெறுவது எங்கள் வழக்கம் . சீனியர்கள் ஜூனியர்கள் மதித்தார்கள். ஜூனியர்களை சீனியர்களும் பாராட்டினார்கள்.
ஆனால் இந்த காலத்தில் சீனியர்களை புதியவர்கள் மதிப்பதில்லை.”என வருத்தப்பட்டார்.
“நான் கார்த்தியுடன் நடித்திருக்கிற படம் விரைவில் வரவிருக்கிறது.இன்னும் நான்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றவரிடம் “நடிகர்கள் சங்கத் தேர்தலில் ஓட்டுப் போட்டிங்களா?” என கேட்டதும் “இல்ல எனக்கு தகவல் எதுவும் வரல.”என்று சொன்னார்.
“சங்கத்தில் பிரச்னைகள் இருப்பது பற்றி தெரியுமா?”
“தெரியாது. விஜயகாந்த் தலைவராக இருந்தபோதும் சரி ,சரத்குமார் ,ராதாரவி ஆகியோர் பொறுப்புகளில் இருந்தபோதும் சரி சங்கக்கட்டிடத்துக்கான வேலைகளில் ஆர்வமுடன்தான் இருந்தார்கள். கட்டிடம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை கார்த்தி என்னை அழைத்துச் சென்று காட்டினார். மற்றபடி என்ன பிரச்னைகள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.”
“இங்கு சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறீர்கள், பார்லிமென்ட் மெம்பராகவும் இருந்திருக்கிறீர்கள். மத்தியஅமைச்சராகவும் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் அமெரிக்காவில் இருப்பதால் சில இந்தியர்களைப் போல நீங்கள் அங்கு அரசியலில் இறங்கினால் என்ன?”
“அரசியலே வேணாம்னுதானே இருக்கேன். ! இப்ப ஹாலிவுட் படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கிறேன். அடுத்து ஹீரோவுக்கு உதவி செய்கிற கேரக்டரில் நடிக்கலாம். அதுக்குப் பிறகு ஹீரோவாகவே நடிக்கலாம்.வாய்ப்புகள் இருக்கிறது.”
“அப்படியானால் கிஸ் பண்ணி நடிப்பிங்களா?”
“அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்!” என சிரித்தார்.