ஜெமினி சினிமாஸ் ஜெமினி ராகவா மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரித்துள்ள படம் ஆண்கள் ஜாக்கிரதை. கே.எஸ்.முத்து மனோகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை யில் நடந்தது.
விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். வழக்கமான நிலைய வித்துவான்களும் பங்கேற்றனர்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுபேசிய போது “ஜெமினி ராகவா தயாரிப்பாளராக தான் எனக்கு அறிமுகமானார். அவருக்குள் இப்படி ஒரு நடிகர் இருப்பார் என்பது இப்போது தான் தெரிகிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்று ரத்தினச் சுருக்கமாக பேசி விட்டு விடை பெற்றார்.
“ஜெமினி ராகவா சினிமாவை நேசிக்க கூடியவர். சினிமா நல்லாருக்கணும்னு நினைக்கிறவர். அவர் இந்தப்படத்தை பட்ஜெட்டுக்குள் முடித்துவிட்டேன் என்றார். இயக்குநரும் அவரும் ஒன்றாக வந்து அதைப் பெருமையோடு சொன்னார்கள். படத்தின் ட்ரைலர் ரொம்ப நல்லாருந்தது. இந்தப்படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று சத்யஜோதி தியாகராஜன் வாழ்த்தினார்.
வழக்கமாக வம்பு இழுப்பவர் கே.ராஜன். அவர் இம்முறை தணிக்கைக் குழுவினரை துவைத்துக் காயப்போட்டார். அவர் பேசுகையில்
“ஆண்கள் ஜாக்கிரதை. எப்போதுமே ஆண்கள் ஜாக்கிரதையாகத் தான் இருக்கணும். ஏன்னா இப்போ மீடூ என்ற விசயம் வந்த பின் ஆண்களுக்குப் பாதுகாப்பே இல்லை. ( உண்மைங்ணா! நீங்க சொன்னா தப்பா இருக்குமா?)
எல்லாரும் முதல் போட்டு படமெடுப்பார்கள். இந்தத் தயாரிப்பாளர் முதலைகளைப் போட்டு படமெடுத்துள்ளார். இப்போது நடிகர்களை வைத்து படமெடுப்பதே கஷ்டம். இவர்கள் முதலையை வைத்து சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.
ட்ரைலரே நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக நல்லாருக்கும்.(அப்படிங்களா ,நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.) குறிப்பாக இசை நன்றாக இருந்தது. அதனால் இது வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை. சூட்டிங்கில் இடையில் நாய் வந்தால் கூட இப்போது சென்சாரில் பிரச்சனை வருகிறது.
மோடி அரசு நல்லா போகுறதா சொல்றாங்க. ஆனால் அனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு சென்சாரில் லஞ்சம் இருக்கு. போனமாசம் கூட ஒரு படத்திற்கு மூன்று லட்சம் வாங்கினார்கள். அனிமல் வெல்ஃபேர் பிரச்சனையை சரி செய்வது படம் எடுப்பதை விட கஷ்டமாக இருக்கிறது.
ஆன்லைன் டிக்கெட் விசயத்தை நிர்மலா சீத்தாராமன் சரி செய்கிறேன் என்று சொன்னார். அதை இப்போது நமது அரசு செய்துள்ளது. அந்த ஆன்லைன் மூலமாக வரும் வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும். இயக்குநர்கள் எல்லாம் தயாரிப்பாளர்களை மனதில் வைத்து படமெடுக்க வேண்டும். ஒரு ஹீரோவை வைத்து படமெடுத்தால் எவ்வளவு வியாபாரமாகும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
இந்த படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை வச்சு செய்திருக்கிறார்கள். ஒரு கேரக்டரையே உருவாக்கி வம்புக்கு வாழைமரம் கட்டி இருக்கிறார்கள்.இதைக் கண்டித்தவர் இயக்குனர் பிரவீன் காந்த். ( வைரமுத்துவுக்கும் இயக்குநருக்கும் என்ன பிரச்னையோ?
“. வைரமுத்து தமிழ்சினிமாவில் முக்கியமான ஆள். எல்லாராலும் கொண்டாடப்படும் ஒரு கலைஞனை இப்படி பண்ணி இருக்க வேண்டாம் என்பது மட்டும் எனக்குத் தோன்றுகிறது. அதை மட்டும் முடிந்தால் கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். இதுபோன்ற சின்னப்படங்கள் நிறைய வரவேண்டும். இப்படம் வெற்றிபெற வாழ்த்துகள்” என்றார் பிரவீன் காந்த்.
ஒரு கவிஞனை கல்லால் அடிக்க வேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.