
பஞ்சராக்ஷரம்’ என்றால் சிவன், இப்படத்தில் சிவனை உணரலாம் என்றார் இயக்குநர் பாலாஜி வைரமுத்து. ஆனால் படத்தின் முன்னோட்டக் காட்சி.மற்றும் பாடல் காட்சிகளை பார்த்த போது ஒரு திரில்லர் படத்தின் அனுபவத்தை உணர முடிந்தது. பஞ்ச ராக்ஷ்ரம் என்றால் நமசிவாய என பொருள் என்கிறார்.
இந்த படமே பஞ்ச பூதங்களையும் கேரக்டராக கொண்ட படம்தான். ஐந்து பேர் ஐந்துவிதமானவர்கள். அவர்கள் ஒன்று கூடும் பொது என்ன நடக்கிறது என்பதுதான் திரில்லர். முன்னோட்டத்தையும் பாடல் காட்சிகளையும் பார்த்தபோது மிகப்பெரிய காரியத்தை செய்யப்போகிறார்கள் என்பது புரிந்தது.
தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது மிகவும் சுருக்கமாக “நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே எடுத்த படம்” என்றார். இந்த காலத்தில் இப்படியும் ஒரு தந்தை கிடைப்பது அரிது.
பாடலாசிரியர் ஜிகேபி பேசும்போது, “என்னை வெளிகாட்டுவதை நான் விரும்புவதில்லை. ‘வாயாடி பெத்த பிள்ளை’ மாதிரியான பாடல்களை எளிமையாக எழுதிவிடுவேன். ஆனால், கர்மா, அண்டம் பற்றியான படத்திற்கு பாடல்கள் எழுதுவது சவாலாக இருந்தது. இசையமைப்பாளர் சுமோ எனக்கு ஒரு நோட்ஸ் அனுப்பியிருந்தார். பொதுவாகவே நான் பாடல்கள் எழுதுவதாக இருந்தால் மிகவும் ஆழமாக சிந்தித்து நேரம் எடுத்து எழுதுவேன். ஆனால், அந்த இசையைக் கேட்டவுடன் பாடல் வரிகள் சரளமாக வந்தது. அதை நேரடியாக பாலாஜிக்கு அனுப்பினேன். அதைக் கேட்ட பாலாஜி நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள் என்றார். மேலும், இப்படத்திற்கு ஏற்றவாறு கதையை இணைக்கும் விதமாகவும் இருக்கும் என்றார்.
நடிகர் கோகுல் ஐதன் என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார். இவரை பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பு என சொல்லலாம்.
கதாநாயகன் சந்தோஷ் தனது கேரக்டரை பற்றி சொல்லவில்லை .அதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள் என்று சொன்னவர் தனது அனுபவத்தை மட்டும் பகிர்ந்து கொண்டார்.
நடிகர் சீமான் ( இவர் அரசியல் சீமான் இல்லை.மதுரைக்காரர்.) பேசுகையில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். இப்படத்திற்காக ஆடிஷன் எடுக்கும்போது இயக்குநர் கூறியதை செய்தேன். பிறகு, எனது உடலமைப்பைப் பார்த்தார். உடனே நீங்கள் தேர்வாகிவிட்டீர்கள் என்றார் என்பதை சொன்னார்.
இசையமைப்பாளர் சுமோ ,படத்தொகுப்பாளர் ஆனந்த் ஜெரால்டின் ஆகியோர் அவர்களது அனுபவங்களை சொன்னார்கள்.
சண்டை பயிற்சியாளர் பில்லா ஜெகந்நாதன் பேசும்போது “படப்பிடிப்பிற்கு இடம் பார்க்க சென்ற இடத்தில் இயக்குநர் பாலாஜி காட்சியை விவரித்தார். ஆனால், மிகவும் குழப்பமாக இருந்தது. பிறகு, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயரையும் கேட்டு தெளிவுபெற்று எடுத்தோம். ஒரு கார் விபத்துக் காட்சியைப் படமாக்குவதற்கு என்ன தேவையோ, என்ன செலவாகுமோ கேளுங்கள் என்று கூறினார். ஆகையால், வித்தியாசமாக எடுக்க நினைத்தோம். இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக ரேம்ப் இல்லாமல் கார் விபத்துக் காட்சியைப் படமாக்கினோம். இந்தக் காட்சிக்கு அதிகமாக மெனக்கெட்டது ஒளிப்பதிவாளர் தான். நான் நினைத்த மாதிரி அந்தக் காட்சியைப் படமாக்கியதில் மகிழ்ச்சி” என்றார்.
இயக்குநர் பாலாஜி வைரமுத்து பேசியதாவது.
“இப்படம் எடுப்பதற்கு முதல் காரணம் எனது அப்பா தான். என் வாழ்வில் உணர்ச்சிகரமான தருணமிது. என்னிடமிருந்த கதைகளில் இந்த கதையைத்தான் முதலில் படமாக்க வேண்டுமென்று நினைத்தேன். ‘பஞ்சராக்ஷரம்’ என்றால் சிவன். இப்படத்தில் சிவனை உணரலாம்.
மேலும், பொதுவாக எல்லோரும் ஒரு தவறு நடந்துவிடக் கூடாது என்று நினைப்போம். நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. நாம் செல்லும்போது விபத்து நடக்கக்கூடாது என்று நினைப்பதற்கும், நல்லபடியாகச் சென்று சேர வேண்டுமென்று நினைப்பதற்கு வித்தியாசம் இருக்கிறது.
ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், சரியாக கணித்து சொல்பவர்கள் குறைவு. நாம் எதிர்மறையாக நினைத்துக் கொண்டிருந்தால் நம் வாழ்க்கையிலும் அது தான் நடக்கும். இப்படம், சிறு சிறு நேர்மறையான எண்ணங்கள் மாறும் போது என்ன நடக்கும் என்பதைக் கூறும்.
சனா நீரைப் பற்றி கூறும் பாத்திரம், மதுஷாலினி காற்றைப் பற்றி கூறும் எழுத்தாளர் பாத்திரம். இப்படி ஐவரும் ஒன்றாக இணையும்போது, அவர்களிடம் ‘பஞ்சராக்ஷரம்’ என்ற புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகம் எதிர்காலத்தைப் பற்றி கூறும். அது அவர்களிடம் கிடைத்த பின் அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது தான் ‘பஞ்சராக்ஷரம்’. யுவராஜ் ‘ஜாக்சன் துரை’யில் பணியாற்றினார். இப்போது, ஆர்யாவுடன் ‘டெடி’ படத்திற்கு பணியாற்றுகிறார். அவர் இப்படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி.
சண்டை பயிற்சி இயக்குநர் நகைச்சுவையாகப் பழகக் கூடியவர். சீமானின் பாத்திரம் தான் சுவாரஸ்யமான கதாபாத்திரம். என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கும் நன்றி என்றார்.












