பிரதமர் மோடியை கடுமையாக தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்திருக்கிறார் பாலிவுட் படத் தயாரிப்பாளர் நடிகர் அனுராக் காஷ்யப். இவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர் என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்.
அண்மையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகா சென்றிருந்த பிரதமர் மோடி பேசுகையில் “மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவாகியது. அங்கு சிறுபான்மையினர் அடக்கப்படுகிறார்கள் .துன்புறுத்தப்படுகிறார்கள் இதனால் அங்கு வாழ வழி இல்லாமல் அகதிகளாக இந்தியாவுக்கு வருகிறார்கள் .இதை கண்டிக்காமல் காங்கிரஸ் கட்சியினர் அரசை எதிர்த்து போராடுகிறார்கள் “என்பதாக குறிப்பிட்டிருந்தார் .
இதற்கு அனுராக் காஷ்யப் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மோடியை விமர்சித்திருந்தார்.
“பாகிஸ்தான் இல்லை என்றால் மோடிஜிக்கு பேசுவதற்கு எதுவும் இருக்காது என்று தெரிகிறது. கேமராக்கள் அவரைச் சுற்றி இருக்கும்போது மட்டுமே அவர் செயல்படுவார். ” என குறிப்பிட்டிருந்தார்.இதற்கு ஆதரவாகவும் கண்டித்தும் விமர்சனம் செய்யப்பட்டது.
மோடியின் செயல்பாடுகளை தொடர்ந்து அரசியல் ரீதியாக விமர்சனம் செய்து வருகிறவர் காஷ்யப்.
பிரதமர் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி இருந்த ஒரு கருத்துக்கு மிகவும் கடுமையாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் அனுராக் காஷ்யப்.இதுதான் தற்போது பாஜகவினரை சூடேற்றி இருக்கிறது.
பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவை ஒரு வளமான, திறமையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய உலக சக்தியாகப் பார்ப்பதே, இந்த நாட்டின் ஒவ்வொரு இளைஞர்கள், சகோதரிகள், மகள்கள், ஏழை, நலிந்த, தாழ்த்தப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, பின்தங்கிய, பழங்குடியினரின் கனவாகும்” என பதிவிடப்பட்டிருக்கிறது.இதற்குத்தான் காஷ்யப் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
“ முட்டாள் தனம்..! ஐயா நீங்கள் பேசும் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? நீங்கள் இளைஞர்களைக் கேட்பதும் இல்லை,பெண்கள் சகோதரிகள் ,மகள்கள் ,ஏழைகள் உங்கள் பாஜக நண்பர்களால் வெறுப்படைந்திருக்கிறார்கள் , ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள், தலித்துகள் உங்களைப் பார்க்கவில்லை, அவர்கள் பழங்குடியினர்களாகவே இருக்கிறார்கள். எனவே, உங்கள் முட்டாள்தனத்தை விட்டுவிடுங்கள்” என கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.
தற்போது இந்த தயாரிப்பாளரின் ட்வீட்டுக்கு பல பா.ஜ.க உறுப்பினரகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துவரும் நிலையில், பொது மக்கள் பலரும் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.