தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று காலை நீட் தேர்வு தொடர்பான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில்,”
“நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 6.1.2020. கடைசித் தேதிக்கு 2 நாட்களுக்கு முன்பாக, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன. அந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறதா? அதுகுறித்து இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது?
மீண்டும் நீட் விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றத் தேவைப்பட்டால் சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தையே கூட்டுவோம் என்று முதல்வர், இதே அவையில் பதிவு செய்திருக்கிறார். காலம் கடந்து கொண்டிருக்கிறதே தவிர, மத்திய அரசிடம் இருந்து எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை. முதல்வர் சொன்னது போல சிறப்புக் கூட்டமும் இதுவரை நடத்தப்படவில்லை. இப்போது போடப்பட்டுள்ள இந்தப் புதிய வழக்கால், என்ன நடந்துவிடப் போகிறது?
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியும் முடிந்து விட்டது. இன்னும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்ற நிலைதான் உள்ளது. ஆகவே இது சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் செய்யக்கூடிய மிகப் பெரிய, மாபெரும் துரோகம்.
நீட் தேர்வில் நாங்கள் செய்தது துரோகம் அல்ல. இப்போது நடந்து கொண்டிருப்பதுதான் துரோகம்.தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல இந்த வழக்கு உள்ளது. கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த வரையில் நீட் தேர்வு வரவில்லை.
ஜெயலலிதா இருந்தபோதும் தமிழ்நாட்டுக்குள் நீட் நுழைய முடியவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்று தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு வரக்கூடாது என்று தடை உத்தரவைப் பெற்று வைத்திருந்தவர் கருணாநிதி. நீதிமன்றத்திற்குச் சென்றதைத் தவறு என நாங்கள் கூறவில்லை. அது காலத்தின் சூழ்நிலை.
கடைசி நாளுக்கு 2 நாட்கள் முன்னர் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளீர்கள். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்திருக்கிறீர்கள் என்பதே உண்மை”.இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்துப் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் , ‘ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர்!; மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளவரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை; அவர் மறைவிற்கு பிறகே நீட் தேர்வு தமிழகத்திற்கு வந்தது’ என்று தெரிவித்தார்.