தமிழர்களின் வேத நூல் திருக்குறள் என்பதை தமிழ்நாட்டில் வாழ்கிறவர்களும் சரி ,ஆட்சியில் அமர்ந்து சென்றவர்களும் சரி ஒப்புக்கொள்ளுவார்கள்.
மத்தியில் ஆளுகிற கட்சிகளும் வசதி ,வாய்ப்புகள் வருகிறபோது வள்ளுவரை வாழ்த்தி விட்டுப் போவார்கள். இது இயல்பு.
இம்முறை என்னவாயிற்று என்றால் திருநீறு பூசி ,பா.ஜ .க.வுக்கு பிடித்தமான காவி உடையை வள்ளுவருக்கு அணிவித்து விட்டார்கள். அந்த படம் இந்தியக்குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழியாக வந்ததால் அதுதான் வள்ளுவரின் தேசிய உடையோ என்கிற குழப்பம் தமிழ் நாட்டில் வந்தது.
தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட வள்ளுவர் படத்தில் தூய வெள்ளை நிற ஆடை மட்டுமே அணிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
காவி உடைக்கு எதிர்ப்பு வந்தது. அதன் பின்னர் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் இருக்கிற பாஜக பிரமுகர்கள் காவியுடையில் வள்ளுவரை சித்தரிப்பதை நிறுத்தவில்லை.
இது தொடர்பாக சென்னை அடையாறில் நடந்த வெற்றிப் பேரவைத்தமிழர் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.
கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில் ” வண்ணம் பூசி வள்ளுவரை கொள்ளையடிக்க பார்க்கின்றனர்.
விட்டுக் கொடுக்க முடியுமா ?
நம்முடைய அடையாளத்தை , அறிவை ,முகவரியை கொள்ளை கொண்டு போக பார்க்கிறார்கள். விட்டுக்கொடுக்க அனுமதிப்பீர்களா ?
அனுமதிக்க மாட்டோம் என்று தலைக்கு மேலே கை உயர்த்தி தலைக்கு வெளி வந்த வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை கொடுக்கின்றன.
எந்த வண்ணம் கொடுத்தாலும் சாயம் போய்விடும் அதனால்தான் வள்ளுவருக்கு வெள்ளை நிறத்தை மட்டுமே கொடுத்து இருக்கிறோம், .திருவள்ளுவருக்கு சாயம் போகாத வெள்ளை நிறத்தை மட்டுமே ஆடையாக அணிவிக்க வேண்டும் என்பதை தமிழர்கள் கொள்கையாக கொள்ள வேண்டும்.
மயிலிறகு அதிகமானால் வண்டியின் அச்சு முறிந்துவிடும் அதுபோல மக்களுக்கு ஒவ்வாத சட்டத்தை திணித்தால் சமூகம் முறிந்து விடும் “என்பதாக பேசினார்.