மாபெரும் இயக்கமான தி.மு.க.வை விட்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வெளியேறிய போது தமிழகம் மட்டுமின்றி இந்திய துணைக்கண்டம் முழுவதும் எதிர்பார்ப்பு இருந்தது.
எம்.ஜி.ஆர் இல்லாமல் திமுக இயங்கமுடியுமா?
எம்.ஜி.ஆரால் தனித்து கட்சி தொடங்கி நடத்த முடியுமா என எதிர்பார்த்தார்கள்.
ஆனால் எம்.ஜி.ஆருக்கு வலுவான சக்தியாக இருந்தது அவரது மன்றங்களும் திமுக.விலிருந்து வெளியேறிய பிரபலமான தலைவர்களும்தான்.
நள்ளிரவு என்றாலும் எம்.ஜி.ஆரின் முகம் பார்க்க மக்கள் கூடினார்கள். ‘செரீஷ்மா ‘என்கிற ஈர்ப்பு சக்தி அவரிடம் இருந்தது .இதர கட்சிகளும் துணையாக இருந்தன.
மக்கள் நம்பினார்கள்.’எம்.ஜி.ஆரும் வளருவார்.திமுகவும் வாழும் என நம்பினார்கள்.
அந்த நம்பிக்கைக்கு காரணம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் ,டாக்டர் கலைஞர் கருணாநிதியும்!
கலைஞருக்கு கழகத்தை கட்டிக்காக்கும் வலிமை ,திறமை,ஆற்றல் இருந்தது. எம்.ஜி.ஆருக்கு மக்களின் மீது நம்பிக்கை இருந்தது.
இதனால் எம்.ஜி.ஆரின் கட்சியின் பெயர் என்ன என அறிவதில் ஆர்வத்துடன் ஊடகங்களும்,மக்களும் இருந்தார்கள்.எம்.ஜி.ஆரின் பேச்சை பிரசுரம் பண்ணினால் பத்திரிகைகளின் விற்பனை உச்சம் தொட்டன.அன்று அத்தகைய நிலை இருந்தது.
அத்தகைய நிலைமையை உருவாக்குகிற முயற்சியைத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆலோசகர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதாகவே நடக்கிற நாடகத்தைப் பார்த்தால் தோணுகிறது.
எம்.ஜி.ஆரை மக்கள் பார்த்த பார்வை வேறு. ரஜினியை பார்க்கிற பார்வையே வேறு.
பாஜகவின் பிம்பமாகவே ரஜினியை பார்க்கிறார்கள்.
கடந்த வாரம் ரஜினி கூட்டிய ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வைத்து தமிழகத்தில் பரபரப்பினை ஏற்படுத்த நினைத்தார்கள்.
நடக்கவில்லை.ஊடகங்களில் மட்டும் பேசப்பட்டது.
உள்ளே நடந்ததை வெளியில் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த ரகசிய கூட்டத்தில் இதுதான் நடந்தது என்பதாக சில தகவல்களை ரங்கராஜ் பாண்டே புட்டு புட்டு வைத்தார். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது. அது ரஜினியின் ஆலோசகர்கள் நடத்திய நாடகமே !
இதைப்போல ரஜினியின் வாய்ஸ் என்று கருதப்படுகிற தமிழருவி மணியனை வைத்து ஒரு நாடகம் நடந்தது.
அதன் முக்கிய சாராம்சமே “ரஜினி முதல்வர் பதவியில் அமர மாட்டார் .அவர் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் சி.எம்.! மேலும் அவரது குடும்பத்தினரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் “என்று தமிழருவி மணியன் சொன்னதுதான்.!
இன்று புதன் காலையிலும் தமிழருவி மணியன் ரஜினியை சந்தித்து பேசினார்.
“சூப்பர்ஸ்டார்தான் சி.எம்.ஆக வேண்டும் “என யாருமே குரல் எழுப்பவில்லை.
ஆனால் அத்தகைய நிலையைத்தான் உருவாக்க வேண்டும் என ரஜினியின் அரசியல் ஆலோசகர்கள் விரும்புகிறார்கள். இதுவே பா.ஜ.க.வின் எண்ணமாகவும் இருக்கலாம்.
அதனுடைய தொடர் முயற்சியாக நாளை ராகவேந்திரருக்கு உகந்த வியாழக்கிழமையில் மறுபடியும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்கள் கூட்டம் நடக்கவிருக்கிறது.
இடம் ராகவேந்திரா கல்யாண மண்டபம் இல்லை. சூப்பர் ஸ்டார் வீட்டில்தான் கூட்டம்.
தன்னுடைய ஏமாற்றம் என்ன என்பதை சொல்வாரா?
இன்னும் நிறையசொல்லப்போகிறார். பத்திரிகையாளர்கள் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரஜினியை பற்றிய பரபரப்பு மக்கள் மத்தியில் ஏற்படுவதற்கு மாவட்ட செயலாளர்கள் என்னென்னெ செய்ய வேண்டும் என்கிற உத்திரவுகள் அல்லது ஆலோசனைகள் வரலாம்.