சிறு பட்ஜெட் படம்தான் ‘பொன்மகள் வந்தாள் ‘
ஆனால் ஆர்ட்டிஸ்ட் வால்யூ இருக்கிறது.
தயாரிப்பு நிறுவனமும் புகழ் பெற்ற நிறுவனம்.சின்ன படமாக இருந்தாலும் சிறப்பான படமாக கொடுக்கவேண்டும் என்கிற நோக்கத்தில்தான் 2 டி நிறுவனமே உருவாக்கப்பட்டது என்கிறார்கள். குறிப்பிட்ட காலத்தில் படங்களை ரிலீஸ் செய்யவில்லை என்றால் பெரிய படத் தயாரிப்பு நிறுவனங்களே சற்று கவலைப்படவே செய்யும். அவர்களுக்கும் பண இழப்பு .
இதனால்தான் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்கிறார்கள்.
இது தொடர்பாக பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி தாணு விரிவாக வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.அதில் அவர் என்ன கூறி இருக்கிறார்?
“இன்றைய சூழ்நிலையில்,பொன்மகள் வந்தாள் படத்தை அமேஸானில் கொடுத்ததில் தவறில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
காரணம் என்னவென்றால் இந்தப் படம் மார்ச் மாத இறுதியில் வெளியாகியிருந்தால் ஏப்ரல் மாதம் முழுக்க தியேட்டரில் ஓடி மே மாதம் ஒடிடி ப்ளாட்பார்மில் வெளியிடப்பட்டு இருக்கும்.ஆனால், ஏப்ரல் மாதம் முழுக்கவே கொரோனா பாதிப்பினால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன .
ஏற்கெனவே அந்தத் தயாரிப்பாளர் நினைத்தப்படி படத்தை ரிலீஸ் செய்யமுடியாமல் போனதால் எத்தனை கோடி இழப்பு ஏற்பட்டதோ?
இந்நிலையில் டிஜிட்டல் ஒப்பந்தப் படி நடந்து கொள்ளாமல் போனால் அந்த தொகையும் வராமல் இழப்பு ஏற்படும்.இந்த ஓடிடி பணத்தையும் இழந்துவிட்டால் என்ன செய்வது?
நண்பர்களே, திரையரங்குகளுக்கு எந்தக் காலத்திலுமே அழிவில்லை. தொலைக்காட்சி வந்தபோது சினிமா அழிந்து விடும் என்றோம். வீட்டுக்கு வீடு சிடி ப்ளேயர் வந்தவுடன் சினிமா அழிந்தது என்றோம். அழிந்து விட்டதா?
இந்த 50 கோடி ரூபாய், 100 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்து வெளியிட்டால், அன்றைக்கு இரவே இணையத்தில் வந்துவிடுகிறது . இதனால் சினிமா அழிந்துவிட்டதா?அந்த மாதிரி தான் இந்த ஓடிடி ப்ளாட்பார்ம்.
வருடத்துக்கு 12 முதல் 15 படங்கள்தான் வாங்குவார்கள். அதிலும் பெரிய படங்களாக வாங்கிவிட்டார்கள் என்றால், சின்ன படங்களை வாங்கவே மாட்டார்கள். அத்தி பூத்தாற்போல் ஒரு சின்ன படம் வாங்கியிருக்கும்போது இதை வரவேற்க வேண்டும்.
இதற்குத் தடைபோட்டு விடாதீர்கள்.சினிமாவை அழிக்கவே முடியாது. ஒரு வழி அடைத்தால், கடவுள் இன்னொரு வழி கொடுப்பார்.
அதனால் நமக்கு நல்லதொரு தீர்வைக் கடவுள் தருவார். சூர்யா நிறையவே கல்வி உதவி செய்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் தொகையும் பல ஏழைகளுக்கு உதவும். ஆகவே இந்த பிரச்சனைக்கு இத்தோடு முற்று புள்ளி வையுங்கள் பொன்மகள் வந்தால் படத்தை தடைசெய்ய வேண்டாம் .சிறு பட தயாரிப்பாளர்களை என்றுமே கைவிட்டு விடாது.அல்லவை அகல, நல்லவை சேர்ந்து பொற்காலம் அமைப்போம்” இவ்வாறு தயாரிப்பாளர் தாணு பேசி இருக்கிறார்.