தமிழ்த்திரையுலகில் நடிகர்கள் சூர்யா, ஜீவா, கார்த்தி ஆகியோருக்கு திருப்புமுனையாக அமைந்த “மெளனம் பேசியதே”, “ராம்”, “பருத்திவீரன்” உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நட்சத்திர இயக்குனர் அமீர்.
யோகி படத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்கினார். அமீர் நடிப்பில் வெளியான “யோகி”, “வடசென்னை” ஆகிய படங்கள் அவரது ரசிகர்களால் நல்ல வரவேற்பு பெற்றது.வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “வடசென்னை” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அமீர், நீண்ட இடைவெளிக்கு பிறகு, தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்
.’முகவரி’, ‘காதல் சடுகுடு’, ‘நேபாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட் துரை இப்படத்தை இயக்கி வருகிறார்.”நாற்காலி” என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப்படத்தில் அமீர் அதிரடியான அரசியல்வாதியாக நடிக்கிறார்..
மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா தயாரிக்கும் நாற்காலி படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் மீண்டும் தொடங்க உள்ளது. ஈழத்தமிழர் போராட்டத்தில் இருந்து மேடைகளில் அரசியல் பேசி வரும் அமீர், இப்போது திரைப்படங்களிலும் அரசியல் கருத்துக்களை முன்வைக்க வந்துவிட்டார்.
கதாநாயகனாக இயக்குநர் அமீர் நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடங்களில் சுப்ரமணிய சிவா, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள்.அமைதிப்படை படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியல் நய்யாண்டி படமாக உருவாகும் படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்து வருகிறார்.
இதே பாணியில் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – பார்த்திபன் இணைந்து நடிக்கும், ‘துக்ளக் தர்பார்’ படமும் அரசியலை மையப்படுத்தி உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.தமிழக மக்களின் கவனம் ஈர்த்த அமீர்,விஜய்சேதுபதி ஆகிய இரண்டு பிரபலமான நட்சத்திரங்கள் அரசியல் படங்களில் நடிப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.