வில்லனாக இருந்து நாயகனாக உயர்வதும் ,நாயகனாக அடிபட்டு வில்லனாக உயர்வதும் சினிமாவில் நடப்பதுதான். காலத்துக்குகேற்ப மாறுவதும் நடிகனுக்கு அழகுதான். அது அவசியமும் கூட. கலையுலகில் நீடித்தாகவேண்டுமே…அதனால் பருவ மாறுதல் போல இந்த கேரக்டர் மாறுதலும் நடந்தாக வேண்டும்.!
நாயகனாகவே நடித்து நன்கு அறிமுகமானவர்தான் கிருஷ்ணா .இவரது சகோதரர் விஷ்ணு வர்தன் பிரபல இயக்குநர்களில் ஒருவர். இவர் தனது சகோதரனை வில்லனாக மாற்றவில்லை.
மாற்றியவர் கவுதம் மேனன்.
கவுதம் மேனன் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘ஜோஸ்வா இமை போல் காக்க.’
“பப்பி” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரையும் கவர்ந்த இளம் நடிகர் வருண் நடிப்பில் ,அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ள அந்த படத்தின் டீசர், சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
தற்போது இந்த படத்தின் பாடலொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கையோடு இந்த படத்தின் வில்லன் இவர்தான் என அறிமுகம் செய்துள்ளார். கவுதம் மேனன் .
ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது
” ஜோஷ்வா படத்தின் வில்லனை அறிமுகம் செய்யும் நேரம் வந்துவிட்டது, நடிகர் கிருஷ்ணா “ஜோஸ்வா இமை போல் காக்க” படத்தில் வில்லனாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்கு மிக்க நன்றி கிருஷ்ணா, இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நீங்கள் சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறீர்கள் பிரதர். ” என கூறியுள்ளார்.
யாமிருக்க பயமே, பண்டிகை, கழுகு போன்ற படங்களில் .இதுவரை கதாநாயகனாகவும் துணை கதாநாயகனாகவும் நடித்து வந்த கிருஷ்ணா இப்படத்தின் மூலம் வில்லனாகவும் மாறியிருக்கிறார். மிரட்டுவாரா?