திரை உலகில் தெற்கின் ஆதிக்கம் வடவர்களை தலை சுற்ற வைக்கிறது.!
தொழில் நுட்பத்திலும் ,கற்பனை வளத்திலும் ,இசையிலும் மட்டுமின்றி எல்லாத்துறைகளிலும் தெற்கின் வலிமை ,வளமை வடக்கில் உள்ள பாலிவுட் பாலகர்களை திகைக்கவைக்கிறது. அங்குள்ள மெய்யான திறமைசாலிகள் தெற்கின் அதிசயங்களை அங்கீகரிக்க முன்வந்தாலும் மிரண்டு போயிருக்கும் பிற்போக்குவாதிகள் அவர்களது கையைப்பிடித்து இழுக்கிறார்கள்.
இல்லாவிடில் ஆஸ்கர் நாயகன் ஏஆர்.ரகுமானுக்கு முட்டுக்கட்டைப் போடுவார்களா?
இசையின் இனிமையை எல்லோரும் பருகவிடாமல் தடுப்பார்களா?
ரகுமான் எந்த வம்புக்கும் போகாதவர் .எளிமையானவர்.அவரே சொல்கிறார் “என்னுடைய வளர்ச்சிக்கு எதிராக தடை போடுகிற முயற்சிகள் வடக்கில் நடக்கின்றன “என்பதாக.!
இது துரோகம் ! இந்தியன் எங்கும் சென்றும் தொழில் செய்யலாம் என்கிற அடிப்படை உரிமைக்கு எதிரானது.
பாலிவுட் சகுனிகள் புரிந்து கொள்வார்களாக.! எல்லோரும் சகோதரர்கள் என்கிற பாசவலைக்குள் கட்டுண்டு கிடக்கும் தமிழர்களின் திறமையை அளவிடும் ஆற்றல் சகுனிகளுக்கு இல்லை .
கவிப்பேரரசு வைரமுத்து தன்னுடைய டிவிட்டர் பதிவில் ரகுமானுக்கு ஆறுதல் கூறி இருக்கிறார். ஆருயிர் நண்பர்களில் ஒருவராயிற்றே.!
“அன்பு ரகுமான்!
அஞ்சற்க.
வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை.
இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு.
ரகுமான்! நீங்கள் ஆண்மான்;
அரிய வகை மான்.
உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை.”