
பெண் பாவம் பொல்லாது என்பார்கள். ஏன் ஆண் பாவம் மட்டும் செல்லாக் காசா? தெரியல.காலம் காலமாக பெண் பாவம்தான் பொல்லாதுன்னு சொல்லிட்டு இருக்காங்க.
இங்கே என்ன பிரச்னைன்னா தமன்னா திடீர்னு குமுறி இருப்பதுதான்!
இந்தி நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை சம்பவத்திற்குப் பின்னர், பாலிவுட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும், அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், மற்றவர்கள் ஒதுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்தி பேசாத பிற மாநிலத்தவர்கள்,ஒடுக்கப்படுகிறார்கள் என்கிற சத்தம் அதிகமாகவே கேட்கிறது.
பாலிவுட் படங்களில் இசை அமைக்க கிடைத்த வாய்ப்புகளை ஒருசில கும்பல் தடுத்ததாக இசைப்புயல் ஏஆர் ரகுமான் சமீபத்தில் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூடவே ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டியும் தனக்கு வாய்ப்புகள் அளிப்பதில்லை என்று புகார் கூறியிருந்தார்.
இந்த பரபரப்பு முடிவதற்குள் இதே குற்றச்சாட்டை தற்போது நடிகை தமன்னாவும் இந்தி திரை உலகில் தனக்கும் அநியாயம் நடந்து விட்டதாக கூறுகிறார் நடிகை தமன்னா,
’எனக்கு பல தடவை விருதுகள் கொடுக்க எனது பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் எனது பெயர் பரிந்துரை பட்டியலில் இருந்தாலும், எனக்கு ஒரு முறை கூட விருது கிடைக்கவில்லை வாரிசு நடிகர், நடிகைகளுக்கே பெரும்பாலும் விருது கிடைத்து வருகிறது’ என்று கடுமையான குற்றச் சாட்டை முன்வைத்துள்ளார்.
திறமையான நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் தந்தால்தான் அவர்களை ஊக்குவிக்க முடியும் என்றும்,என்ன தான் ரசிகர்கள் ஆதரவு இருந்தாலும், விருதுகள் ஒவ்வொரு கலைஞருக்கும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். தமன்னாவின் இக்குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












