தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.
ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் ரஜினிகாந்த். ஒவ்வொரு பயணமும் ஜோதிடர்களின் ஆலோசனைப்படிதான் நடக்கிறது.
கடந்த நவம்பர் 30 ம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பும், அவரது முதல் டுவீட்டும் நல்ல நாள் பார்த்தே நடைபெற்றது.
ஜனவரி 17ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்தநாள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தை மாதம் 04ஆம் தேதி பஞ்சமி திதி, குரு பகவானுக்கு உகந்த பூரட்டாதி நட்சத்திரம் இணைந்துள்ளது. இந்த நாளில் ரஜினி கட்சி பெயரை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக ஜோதிடர்கள் நம்புகிறார்கள். ஆன்மீக அரசியல் வேண்டும் என நம்புகிற ஆன்மீகவாதிகளும் நம்புவார்கள்.
” எம்ஜிஆரின் ஆட்சியை கொடுப்பேன்” என்றவர் ரஜினிகாந்த். அதனால் எம்ஜிஆர் பிறந்த நாளில் கட்சி தொடங்க ஆயத்தமாகியுள்ளார் என்கிறார்கள்.
ஆனால் எம்.ஜி.ஆரும் திராவிட சார்ந்த கட்சியைத்தான் நடத்தினார் ,என்பதும் அவரது ஆட்சிக்காலத்தை கடுமையாக விமர்சித்தவர்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
கட்சி தொடங்கும் தேதி டிசம்பர் 31ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிக்கவுள்ள நிலையில் இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
” கமல் ஹாசன் எம்ஜிஆர் எங்கள் சொத்து, அவர் மடியில் வளர்ந்தவன் நான்” என்று மக்கள் மய்ய தலைவர் கமல்ஹாசனும் கூறி வரும் நிலையில் தற்போது ரஜினியும் எம்ஜிஆரை முன்னெடுத்து செல்வது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் அதிமுகவினர் அறவே எம்.ஜி.ஆரை புறக்கணித்துவிட்டு ‘அம்மா வழியில் ஆட்சியை ‘நடத்துவதாக சொல்கிறவர்கள்.
இந்நிலையில், தனது புதிய கட்சியை எம்ஜிஆர் பிறந்த தினமான ஜன.17-ல் தொடங்குவது பற்றி நடிகர் ரஜினிகாந்த் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி தொடங்கியவுடன் பிரச்சாரத்துக்கு செல்ல ரஜினி திட்டமிட்டிருப்பதாகவும், அவரது பிரச்சார சுற்றுப்பயண திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.