நரமாமிசம் உண்ணும் காட்டுவாசி குழுவை மையமாக வைத்து காமெடி, அட்வெஞ்சர், திரில்லர் பாணியில், தமிழில் முதல் முறையாக உருவாகும் படம் “ட்ரிப்”. இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். சாய் பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.விஸ்வநாதன் மற்றும் இ .பிரவீன்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், சித்து,ராகேஷ், கல்லூரி வினோத், ராஜேஷ் சிவா அதுல்யா சந்திரா, லக்ஷ்மி ப்ரியா, சத்யா, மேக் மணி, சதீஷ், அருண் ஆகியோர் நடிக்கிறார்கள்.
“ட்ரிப்” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவினில் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் கூறியதாவது…
இயக்குநர் சாம் ஆண்டனின் 100 படத்தில் பணியாற்றியபோது நடிகர் யோகிபாபுவுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டானது. ஒரு நல்ல திரைக்கதையுடன் வா என கூறினார். தயாரிப்பாளர்கள் என் மீது மிகப்பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். ரசிகர்கள் கொண்டாடும்படியான கமர்ஷியல் திரைக்கதையை உருவாக்க நினைத்தேன்.
தமிழ் சினிமா ஏற்கனவே ஜாம்பிகளை கொண்டு படமெடுத்து விட்டது எனவே நான் கொஞ்சம் வித்தியாசமாக நரமாமிச குழுவை மையப்படுத்தி படமெடுக்க நினைத்தேன்.
இந்த வகை திரைப்படங்கள் ஹாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்றவை. ஆனால் அங்கு ஹாரரும் திரில்லும் கலந்தே எடுப்பார்கள். ஆனால் நான் அதில் ஹியூமரை இணைத்து உருவாக்கினேன். இந்த வகை படம் தமிழ் திரையுலகிற்கு முற்றிலும் புதிதானது. வெளியாகவுள்ளது. சக்தி பிலிம் பாக்டரி சக்திவேலன் எங்கள் படத்தை பார்த்து, படத்தின் உரிமை பெற்று பெரிய வெளியீடாக திரையிடவுள்ளது எங்களுக்கு பெரும் ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் தந்துள்ளது. நல்லிதயம் கொண்ட மனிதர். திரைப்படம் பற்றிய அபார அறிவு கொண்டவர். இங்கு அவரது இருப்பு கடவுளின் இருப்பை போன்று பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.”என்றார்.
சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் கூறியதாவது..
“திரையுலக நணபர்கள் பணியாளர்கள் அனைவருக்கும் ஊடக நண்பர்களோடான உரையாடல், மற்றும் சந்திப்பை நிகழ்த்த முடியாமல் இருப்பது பெரும் வருத்தமிக்க விசயம்.
நடிகர் விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் பெரும் தடைகளை முறியடித்து சாதனை படைத்துள்ளது. பொது முடக்க காலத்தில் யாரும் இனி திரையரங்கிற்கு வரமாட்டார்கள் என்கிற மாயையை “மாஸ்டர்” படம் உடைத்திருக்கிறது. ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் திரையரங்கில் படத்தை ரசிப்பது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
‘மாஸ்டர்’ படத்தால் ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த பல படங்கள் தற்போது பின்வாங்கிட்டன. சினிமா மீது பெரும் அர்ப்பணிப்பும் காதலும் கொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
புதிய வரவுகளை கொண்டு உருவாகும் இப்படத்தின் மீது பெரும் நம்பிக்கையுடன் பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளார்கள்.
யோகிபாபுவை வைத்து இயல்பாக எடுக்கப்படும் பட்ஜெட்டை விட பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளார்கள். இப்படத்தில் கண்டிப்பாக நல்ல லாபத்தை அடைவார்கள். பெரும் நம்பிக்கையுடன் இப்படத்தை தயாரித்ததற்கு வாழ்த்துக்கள்.
யோகிபாபு, கருணாகரன் முதல் படத்தில் நடித்துள்ள அனைவரும் படத்தை மிகச்சிறப்பான படமாக மாற்றியுள்ளனர். இப்படம் கண்டிப்பாக கமர்ஷியலாக பெரும் வெற்றி பெரும் இப்படத்தில் நானும் பங்கு கொண்டதில் மகிழ்ச்சி”என்று கூறினார்..
நடிகர் பிரவீன் குமார்,நடிகை சுனைனா ,நடிகர் கருணாகரன்,தயாரிப்பாளர் விஸ்வநாதன், இசை அமைப்பாளர் சித்து ,ஒளிப்பதிவாளர் உதயசங்கர் ,மற்றும் பலர் பேசினார்கள்.