சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சுல்தான் படக்குழுவினர் கலந்து கொண்டனர் .
நடிகர் கார்த்தி பேசும்போது,
“இப்படத்தை பார்த்து வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன். நான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு 8 அடியில் கடா மாதிரி ஒரு கேரக்டர் . அதேபோல், குள்ளமாக ஒரு பாதுகாவலர். இதுபோக, 100 அடியாள்கள். என்னை பாதுகாப்பது தான் அவர்களின் வேலை. எப்போதும் என்னைச் சுற்றியே இருப்பார்கள் என்று கேட்கும்போது கற்பனைக் கதை போல தோன்றியது. அனைவரும் அதை விரும்புவோம்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், லால் சார் கண்டிப்பாக இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார். அவர் கூறியதைப் போல லால் சார் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
மயில்சாமியின் நகைச்சுவையை நான் மிமிக்ரி செய்ய முயற்சி செய்யும் அளவிற்கு அளப்பரியதாக இருக்கும். அதேபோல, யாருக்கு என்ன தேவையோ அதை கடன் வாங்கியாவது செய்யக் கூடியவர். எம்.ஜி.ஆர்.-ன் குணத்தை பின்பற்றி வருகிறார்.
காமராஜ், சென்றாயன், என்று ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருந்தார்கள்.
பாடல்களிலும் கதையைக் கூறி யாரையும் எழுந்து போக விடாமல் இசையமைத்த இசையமைப்பாளர்களுக்கு நன்றி.
அர்ஜெயின் ‘தலையா’ கதாபாத்திரத்தை அனைவரும் ரசிக்கிறார்கள். இப்படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் ஒரு ஓவியம். அதை வடிவமைத்த பெருமை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனையே சேரும்.
இப்படத்தை திரையரங்கிற்கு குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். குழந்தைகள் ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்வதாக என்னிடம் தொடர்புக் கொண்டு பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும், இப்படம் திரையரங்கிற்கான படம், அதற்காக 3 வருடங்கள் பொறுமையாக இருந்து வெளியிட்ட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி. ஓடிடியில் இப்படத்தை வெளியிட்டிருந்தால் இந்த அளவு பாராட்டுக்கள் வந்திருக்காது.
அதேபோல், பாதுகாப்போடு ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அனைவர் பற்றியும் பேசிவிட்டு கதாநாயகி ராஷ்மிகாவைப் பற்றி பேசவில்லையென்றால் எப்படி? இப்படத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கு இந்த நேரத்தில் மிக்க நன்றி” என்றார்.
நடிகர் பொன்வண்ணன் பேசும்போது,
“காலத்தின் பேரன்பு அனைவருக்கும் கிடைக்கட்டும். அப்படி கிடைத்த காலத்திற்கு நன்றி. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு தொடங்கியது. இப்படமும் ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. அந்த ஊரடங்கின் முக்கிய நோக்கம் அனைவரும் ஒன்றிணைய கூடாது என்பது தான். சில தொழில்கள் தங்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் ஒன்று விவசாயம். அதில் முதலிலும், பெரிதும் பாதிக்கப்பட்டது சினிமாத் துறை தான்.
நடிகர் கார்த்தியுடன் அவர் நடித்த முதல் படத்தில் ஒன்றரை வருடம் காலம் பயணித்திருக்கிறோம். அதன்பிறகு, நீண்ட வருடங்களுக்கு பிறகு ‘சுல்தான்’ படத்தில் தான் பணியாற்றினோம். அதற்கிடையில், அவர் பல நிலைகளில் நடித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். ஆனால், கார்த்தியிடம் முதல் படத்திற்கும், ‘சுல்தான்’ படத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சில பொறுப்புகள் கூடியிருப்பதை மட்டும் தான் பார்த்தேன்.
இந்த பெருந்தொற்றால் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தாலும் பிடிவாதமாக திரையரங்கில் வெளியிட காத்திருந்தமைக்கு நன்றி” என்றார்.
எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,
“எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் துறைக்கும் சிறப்பான படம் ‘சுல்தான்’. திரைத்துறையை மட்டுமே நம்பி இருப்பவர்கள் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார்கள். நாங்களும் இடையில் ஓடிடிக்கு போகலாம் என்று நினைத்தோம். அதற்கான வாய்ப்பும் இருந்தது. ஆனால், இப்படம் திரையரங்கிற்கான படம் என்பதால் பிடிவாதமாக திரையரங்கிற்கே கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தோம். எங்களைப் போலவே படம் எடுத்துவிட்டு வெளியிட காத்திருந்தவர்கள், உங்கள் படத்தின் வரவேற்பைப் பார்த்துவிட்டு தான் நாங்கள் எங்கள் படங்களை வெளியிடுவோம் என்று கூறினார்கள். அவர்களின் நம்பிக்கைக்காகவும் இப்படத்தை திரையரங்கில் வெளியிட்டோம். இதற்கு கார்த்தி அண்ணாவிற்கும், சூரியா அண்ணாவிற்கும் நன்றி.
பெரும்பான்மையான விமர்சனங்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தது. ஆனாலும், ஒருசில எதிர்மறையான விமர்சனங்களும் இருந்தது. அதைத்தாண்டி, திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களை புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறார்கள். அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த சமயத்தில் ‘கர்ணன்’ படமும் வெளியாக இருக்கிறது. அப்படத்திற்கு வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன்.
இப்படத்தில் இறுதிவரை எங்களுக்கு லால் சார் ஆதரவாக இருந்தார். அவருக்கு நன்றி என்றார்.
நடிகர் லால் பேசும்போது,
நான் சுலபமாக தமிழில் பேசுவேன். ஆனால், உங்களுக்கு புரிந்துகொள்ள சிரமமாக இருக்கும்.
சுல்தான் மாதிரி பிரமாண்டமான படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. இப்படத்தில் சண்டை, நடனம், நடிப்பு, உணர்வுரீதியாக என அனைத்தும் இருக்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்ததற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்தை பிரகாஷ் ராஜ் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
அதைவிட, இப்படத்தில் லால் நன்றாக நடித்திருக்கிறார் என்று செய்தி, வீடியோ வருவதைப் பார்க்கும்போது திருப்தியாக இருக்கிறது. இப்படத்தில் முரட்டுத்தனமாக உடலமைப்பு உள்ளவர்களுக்கு சிறிய அழகான மனசு இருக்கிறது. அதேபோல, சிறிய உடல் கொண்ட பிரபுவிற்கு பெரிய மனது. இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பேசும்போது,
இப்படத்தை திரையரங்கிற்கு கொண்டு சென்ற எஸ்.ஆர்.பிரபு, அதற்கு உறுதுணையாக இருந்த எங்கள் சுல்தான் கார்த்தி சாருக்கும் நன்றி.
இப்படத்தை பார்த்தவர்கள், முதலில் நான் சென்றேன், பிறகு எனது குடும்பத்தை அழைத்துச் சென்றேன். எனது பெற்றோர்கள் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்கிறார்கள் என்று என்னை தொடர்பு கொண்டு பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்படத்தில் எனக்கு அப்பாவாக இருந்தது லால் சார் தான். சுல்தான் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், படப்பிடிப்பில் நான் மறந்தாலும் கூட அவர் நினைவு வைத்திருந்து பணியாற்றினார். என் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நன்றாக நடித்திருப்பார் என்று கூறினார். ஆனால், லால் சார் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
இறுதியாக, யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இருக்கும் அடிப்படை இசையை எடுக்காமல் இசையமைக்க முடியாது. அதற்காக அவருக்கு நன்றி” என்றார்.