நடிகை சமந்தா போராளி ராஜியாக நடித்து வெளிவந்துள்ள பேமிலிமென் 2 என்கிற படத்தைப் பற்றி இதுவரை எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடாத சமந்தா தற்போதுதான் தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் வழியாக சொல்லியிருக்கிறார்.,
“அது தமிழீழவிடுதலைப் பெண் போராளியின் கற்பனை கதைதான் ” என்பதை.!
மிகப்பெரிய வரலாற்று உண்மையை திரித்து சொல்கிற முயற்சியே அந்த வெப் தொடர் என்பது அவரது கூற்றிலிருந்து அறிய முடிகிறது.
அவரது அறிக்கையின் முக்கிய பகுதிகளை மட்டும் பார்க்கலாம்.
“ஈழப் போரில் பாதிக்கப்பட்ட பெண்களின் கதைகளை உள்ளடக்கிய தமிழ் போராட்டத்தின் ஆவணப்படங்களை படக்குழுவினர் எனக்கு காண்பித்தனர்.
ஈழத்தமிழர்கள் பல காலங்களாக அனுபவித்த கஷ்டங்கள் மற்றும் சொல்ல முடியாத துயரங்களைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்தபோது உலகம் எப்படி விலகி நின்று பார்த்தது என்பது அந்த ஆவணப்படங்களை எத்தனை பேர் பார்த்தனர் என்கிற கணக்கினை பார்த்தபோது தெரிந்தது. ஈழத் தமிழர்கள் பலர் தங்கள் நாட்டில் நடந்த போரின் காயங்களுடன் மற்ற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
ராஜியின் கதை, கற்பனையானது என்றாலும், ஒரு நியாயமற்ற போரினால் (அன்ஈக்குவல் ) இறந்தவர்களுக்கும், போரின் வேதனையானநினைவுகளுடன் தொடர்ந்து வாழ்பவர்களுக்கும் நான் செய்யும் ஒரு அஞ்சலி. ராஜியின் சித்தரிப்பு சமநிலையாக, நுணுக்கமாக மற்றும் உணர்திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்தேன்.”என்கிறார்.
அதாவது தமிழீழ விடுதலைப்போரே நியாயமற்றப் போர் என்பதாக சொல்கிறார்.இதுதான் கொடுமையிலும் கொடுமை.!
தமிழீழத் தமிழர்க்கு எதிராக நடத்திய சிங்கள இனவெறி ஆதிக்கம்தான் அந்த விடுதலைப் போர் என்பதை வசதியாக மறந்துவிட்டு சமந்தா கதை சொல்கிறார்.
சிங்கள இன வெறியரான ஜெயவர்த்தனேயின் கழுத்தை அவ்வப்போது பிடித்து கட்டுக்குள் வைக்க இந்திரா காந்தி போன்ற வீராங்கனைகளும் .எம்.ஜி.ஆர் போன்ற பொன் மனச்செம்மல்களும் ஆட்சிகளில் இருந்தார்கள்..ஈழப்போராளிகளை ராணுவ ரீதியாக வளர்த்தவர்கள் அவர்கள்தான் என்கிற சரித்திர உண்மைகளை சமந்தாவுக்கு யாராவது சொல்லியிருக்கக்கூடாதா?விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் நடந்த பயிற்சி முகாம்களை மறந்துவிட்டார்களா?