
பிரபலங்கள் என்றாலே பலவிதமான பிரச்னைகளை சந்தித்தாக வேண்டியதாக இருக்கிறது.
அவர்கள் ‘தேமே ‘என்று இருந்தாலும் வம்புத்தவளைகளின் இரைச்சலுக்கு காதுகளை கொடுத்தாக வேண்டும்.
தன்னுடைய கருத்துக்களை வெளியிட ஒரு மேடை இருக்கிறது ,அது டிவிட்டராக இருக்கலாம் ,பேஸ் புக்காக இருக்கலாம் ,எதிலாவது நமது எண்ணங்களை பதிவிடலாம் என்றால் அங்கேயும் போலிகளுக்கு முகத்தை கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.
தன்னுடைய முகத்தை எவனோ ஒருவன் திருடுகிறான் .எழுதுகிறான்.
அவன் நானில்லை என்று சொல்ல வேண்டியதாக இருக்கிறது.
மயில்சாமி, சார்லி, செந்தில்ஆகியோரையும் விட்டு வைக்கவில்லை இந்த போலிகள்.!
அவர்களின் பெயரிலும் போலி கணக்குகள்!
அதனை மறுத்து அவர்கள் போலீஸிலும் புகார் அளித்திருக்கிறார்கள்
.இதேபோல் நடிகர் விஜய்யின் மகன் மற்றும் மகள் பெயரிலும் டிவிட்டரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டன. இதனை தொடர்ந்து அவர்களுக்கு எந்த சோஷியல் மீடியாவிலும் கணக்கு இல்லை என விஜய் தரப்பு விளக்கம் அளித்தது.
இந்நிலையில்,பிரபல காமெடி நடிகர் வடிவேலு டிவிட்டரில் இணைந்துள்ளதாக ஒரு பதிவு வைரலாகி வருகிறது.
அப்பதிவில் வடிவேலு மிகவும் ஸ்டைலாக கண்ணாடி அணிந்துள்ள புகைப்படமும், மற்றும் டு விட்டரில் இணைவது மகிழ்ச்சி! தமிழ் மக்களுக்கு நன்றி எனவும் பதிவிடப்பட்டுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள், இதுவும் போலி கணக்குதான் என்று கூறி வருகின்றனர். மேலும் எத்தனை முறைதான் இவரை டிவிட்டரில் இணைப்பீங்க என்றும் கேட்டு வருகின்றனர். வடிவேலு பெயரில் உள்ள டிவிட்டை பார்த்த ஒரு ரசிகர், மறுபடியும் ஃபேக் ஐடியா.. அப்படியே ஓடிப்போயிடு என பதிவிட்டுள்ளார்.
வடிவேலுவிடம் கேட்டதற்கு “எனக்கு டிவிட்டர்னா என்னன்னே தெரியாது. நான் எதிலும் இல்லீண்ணே ! திடீர் திடீர்னு கொரானா மாதிரி கெளம்புறாய்ங்களேண்ணே “என்கிறார் சிரித்துக்கொண்டே !












