
படத்தின் தலைப்பு ஒருவகையில் பார்த்தால் வில்லங்கமாக தெரிகிறது.! படத்தில் நிறைய ‘லிப் லாக் ‘இருப்பதாகவும் சொல்கிறார்கள். ‘நிக்குமா ,நிக்காதா?’ என்கிற தலைப்பு ரசிகர்களை கவர்வதற்காக வைக்கப்பட்டிருக்கலாம். அதுவும் குறும் படமாம். நாயகன், நாயகி பெயர்களை பார்த்தால் புதியவர்களாக தெரிகிறது.
ஆதேஷ் பாலா,தமிழரசி ஆகியோர் கதையின் நாயகன் ,நாயகி ஆவர்.
தயாரிப்பு கம்பெனியின் பெயர் ‘கடைசி பஸ் ‘செம.!
விக்கலையும், லிப் டு லிப் கிஸ்ஸையும் மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த குறும்படத்தை கடைசி பஸ் கார்த்திக் இயக்கியிருக்கிறார்.சூப்பர் ராஜா!
இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், கதாசிரியரும், வசனகர்த்தாவான லியாகத் அலிகான், இயக்குநர் கஸாலி, தயாரிப்பாளர் கே. ராஜன், பாடலாசிரியர் முருகன் மந்திரம், சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் சிவன் சீனிவாசன், நடிகர்கள் சாம்ஸ், ரோஷன் ராஜ் கிருஷ்ணா, சின்னி ஜெயந்த், சம்பத்ராம் , தேவன், நாயகன் ஆதேஷ் பாலா, நடிகை தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெளுத்துக்கட்டியிருக்கிறார்கள்.
யூ டியூப் நடத்துபவர்களுக்காக ‘கன்டென்ட் ‘ கொடுத்துப் பேசுகிற கே.ராஜன் இந்த விழாவின் நாயகனாக இருந்தார். நடிகர் சாம்ஸ் பேசுகையில்,உலக நாயகன் கமல்ஹாசனை வம்புக்கு இழுத்தார்.அப்படி பேசினால் தலைப்பு செய்தியாகலாம் என நினைத்து விட்டாரோ என்னவோ!
கே.ராஜன் பேசுகையில் வழக்கமான தாக்குதல்கள் நிறைய.!
” கோடிகளில் சம்பளம் பெறும் நடிகர்களால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் நிக்குமா? நிக்காதா? அமைதியாக இருந்த நாட்டில் திடீர் திடீரென்று மதக்கலவரங்கள் உருவாகிறதே. இது நிக்குமா நிக்காதா? அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் லஞ்சம் லாவண்யம் நிக்குமா? நிக்காதா.? ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகளை சார்ந்த அரசியல்வாதிகளிடம் சோதனை என்ற பெயரில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் பணம் மற்றும் அது தொடர்பான விவரங்கள் தாக்கல் செய்யப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதே. இந்த அக்கிரமம் நிக்குமா நிக்காதா?”என்று நியாயங்களை அடுக்கினார்.
“நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள், மதிய வேளையில் நெய்வேலியிருந்து வலுக்கட்டாயமாக சென்னைக்கு வாகனத்தில் அழைத்து வந்தனர். அந்தப் பயணத்தின் போது என்ன பேச்சுவார்த்தை நடைபெற்றது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் அதன் பிறகு நடிகர் விஜய் மத்திய அரசை விமர்சித்தோ. ஜிஎஸ்டி குறித்தோ இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது. இதுபோன்ற விவகாரங்கள் நிக்குமா நிக்காதா?
கட்சியில் ரவுடிகளை சேர்த்துக் கொள்கிறீர்கள். இதனால் அராஜகம் உருவாகுமே. இந்தப் போக்கு நிக்குமா நிக்காதா? 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்களே.. இது நிக்குமா நிக்காதா? பால்ய வயது சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் நிக்குமா நிக்காதா?”என்றும் கேட்டார்.
நிகழ்ச்சியில் நிக்குமா நிக்காதா? குறும்படத்தை கே ராஜன் வெளியிட, படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.












