வாய்ப்புகள் இல்லாமல் ஒதுக்கப்பட்டவர்கள் ,பிற மாநில படங்களில் மின்னுவது இயல்பானது. சொந்த மாநிலத்தில் ஒதுக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.! அவைகளை ஆராய்வது சொட்டை மண்டையில் எதை தேய்த்தால் முடி வரும் என்பதற்கு ஒப்பாகும்.
சரி மேட்டருக்கு வருவோம்.
தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டப்படி குற்றம்’ என்கிற படத்தில் அறிமுகமான கோமல் சர்மா, அதன்பிறகு ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நடித்த வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். இதன் பின்னர் தமிழில் இவரைப் பார்க்க முடியவில்லை.
பிரியதர்ஷன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு மிகப்பிரம்மாண்டமாக வெளியான வரலாற்று படமான மரைக்கார் படத்தில் அர்ஜூனின் மனைவியாக, நடித்திருந்தார் கோமல் சர்மா.
அந்த படத்திற்காக மலையாள மொழியையும் ஓரளவுக்கு கற்றுக்கொண்டார்.
அப்போது சூப்பர் ஸ்டார் மோகன்லால் இவரிடம், “நீ இன்டர்நேஷனல் லெவலில் பெரிய நடிகையாக வருவாய்” என்று பாராட்டியுள்ளார்.
அப்போதைக்கு அவர் ஏதோ பாராட்டுக்காக சொல்கிறார் என நினைத்த கோமல் சர்மாவுக்கு அதன்பின் மோகன்லால் முதன் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்து தற்போது இயக்கிவரும் பரோஸ் என்கிற படத்தில் கோமல் சர்மாவை அழைத்து முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்தபோது தான் அப்போது மோகன்லால் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்ததாம்.
மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மரைக்கார் படத்தில் நடித்தபோதே இவரது நடிப்பை கண்டு வியந்த இயக்குனர் பிரியதர்ஷன் இந்தியில் தான் இயக்கி வந்த ஹங்கமா-2 என்கிற படத்திலும் சிம்ரன் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை அளித்தார்.
இப்படி மலையாளத்தில் கோமல் சர்மாவுக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வந்த நிலையில் தமிழிலும் சமுத்திரகனி நடித்துள்ள பப்ளிக் என்கிற படத்திலும், அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் மோகன்லாலை வைத்து பெருச்சாளி ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் இயக்கிவரும் சாட் பூட் த்ரீ படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்து, அந்த படங்களிலும் நடித்து முடித்துவிட்டார் கோமல் சர்மா.
அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள பப்ளிக் படத்தில் சினிமா நட்சத்திரமாக நடித்துள்ளார் கோமல் சர்மா.
சக நடிகராக மோகன்லாலுடன் இணைந்து நடித்த கோமல் சர்மா ஒரு இயக்குனராக மோகன்லாலை எப்படி பார்த்தார்..?
“மோகன்லால் தான் நடிக்கும் படங்களில் இயக்குனரின் வேளைகளில் எந்த ஒரு குறுக்கிடும் செய்யமாட்டார். அதேபோல தற்போது அவர் இயக்கி வரும் பரோஸ் படத்தில் நடித்தபோது பெரிய நட்சத்திரங்களிடமும் சரி, குழந்தை நட்சத்திரங்களிடமும் சரி, காட்சியை பற்றி மிகவும் பொறுமையாக விளக்குவார்.. அவர் நினைத்திருந்தால் ஒரு கமர்சியல் ஆக்ஷன் படம் எடுத்திருக்க முடியும். ஆனால் தான் முதன்முறையாக இயக்கும் படம் குழந்தைகளை கவரும் விதமாக, குடும்பம் சென்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதால் இப்படி ஒரு கதையை தேர்வு செய்து இயக்கி வருகிறார்.
பான் இந்தியா படம் என்று சொல்வதைவிட பான் வேர்ல்ட் படம் என சொல்லும் விதமாக பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த பரோஸ். இந்தப்படம் வெளியான பிறகு எனக்கான வாய்ப்புகள் இன்னும் பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்” என நம்பிக்கையுடன் கூறுகிறார் கோமல் சர்மா












