சோதனைக் குடுவைக்குள் தன்னைப் போட்டுக் கொண்டு சுய சோதனை செய்து கொண்டிருக்கிறார் சந்தானம்.
காமெடியனாகி ,கதையின் நாயகன்களுக்கு நண்பனாக மாறி ,பின்னர் நாயகனாக உயர்த்திக் கொண்டிருந்த சந்தானம் இந்த படத்தின் வழியாக மற்றொரு தளத்துக்கு சென்றிருக்கிற படம். நாம் பார்த்திராத சந்தானம்.
அவ்வப்போது அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கிற நக்கல் வெளிப்பட்டாலும் முகபாவம் சீரியஸாக இருக்கிறது. தாடியும் ஒரு காரணம்.ஆனால் ரசிக்க முடிகிறது .!சந்தானத்தின் ரசிகர்கள் இந்த மாற்றத்தை விரும்புவார்களா ?
அமேசான் காட்டில் பிறந்தவர் .நாடுகள் கடந்து சென்னை வந்து வாழ்கிறவர் .கூகுள் என பெயர் .இருந்தாலும் குல்லு என்றே அழைக்கப்படுகிறார். உதவி என்று எவரேனும் வந்தால் தயங்காமல் செய்கிறவர்.
“பிச்சைக்காரியின் உணவுப் பொட்டலத்தையும் விடுவதில்லை “என திமிரேறித் திரியும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீனாவின் செவுளில் ஓங்கி ஒரு அப்பு அப்பி விட்டு படத்தின் எண்ட் வரை துரத்தப்படுவதில் ஒரு ‘சந்தான இசம் ‘இருக்கிறது.கதையை வித்தியாசமாக கொண்டு செல்லவேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டிருக்கிற இயக்குநர் ரத்னகுமார் ,சில இடங்களில் தடுமாறி இருக்கிறார்.ஈழத்தமிழர்கள் என்றால் இவருக்கு பிடிக்காதோ என்னவோ?
தங்கள் நண்பனை ஒரு கூட்டம் கடத்திவிட்டது மீட்டுக் கொடுங்கள் என்று சிலர் அவரை அணுகுகிறார்கள். சந்தானமும் கடத்தப்பட்டவரை மீட்கப் புறப்படுகிறார். அப்பாவின் மற்றொரு மனைவிக்குப் பிறந்த சகோதரியை மரணக்குழிக்கு அனுப்ப வேண்டும் என்கிற வெறியுடன் அலைகிற பிரதீப் ராவத் கும்பலையும் சந்தானம் எதிர்கொள்ள நேரிடுகிறது.
கடத்தப்பட்டவரின் நண்பராக வருகிறார் நமீதாகிருஷ்ணமூர்த்தி.
மற்றொரு நாயகி அதுல்யாசந்திரா. வெளிநாட்டுப் பெண்ணாக வருகிறார். கோடிக்கணக்கான சொத்துகள் உள்ள குடும்பங்களில் உள்ள சிக்கல்களை அம்பலப்படுத்தும் வேடம் அவருக்கு. நன்றாகச் செய்திருக்கிறார்.
பிரதீப்ராவத்,பிபின், தீனா ஆகியோர் கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.சொல்லவே வேண்டாம் பிரதீப் ராவத்தை.! அவரது உயரமும் கொடுமையான முகமும் ,அதற்கேற்ற குரலும் நல்ல தேர்வு.
ஒளிப்பதிவாளர் விஜய்கார்த்திக் கண்ணன், சந்தோஷ்நாராயணன் இசை என தக்க துணையுடன் படம் செல்கிறது. படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். பாடல்கள் கேட்கும் ரகம்.
பப்ஜி போன்ற இணைய தள விளையாட்டுகளின் ஆபத்தை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள் .
சிறுபாண்மை சமூகத்தினரின் வலி ,ஏதிலியாக வாழ்கிற அவலம் என சந்தானத்துக்குக் கடுமையான கேரக்டரை கொடுத்திருக்கிறார்கள். அந்த மனிதரும் வாழ்ந்திருக்கிறார்.
சந்தானத்தின் புதிய முயற்சி .