
ஃ பாரஸ்ட் கம்ப் என்கிற ஹாலிவுட் படத்தை இந்திய மொழிகளில் ஆமிர்கான் நடித்து திரை யிட்டிருக்கிற படம்தான் ‘லால்சிங் சத்தா’.
பொதுவாக அசலுடன் சினிமாக்களை ஒப்பிட்டு அலசிப்பார்ப்பது ஆரோக்கியமில்லை என கருதுகிறவன்தான் இந்த விமர்சகன்.அந்தந்த இடங்களுக்கு தகுந்தபடி அந்த நாடுகளில் வாழ்க்கை முறையுடன் கதை பயணிக்கும்.
ஃ பாரஸ்ட் கம்ப் என்கிற கதையை நமது மண்ணுக்கு ஏற்ப அதுல்குல்கர்னி திரைக்கதையை அமைத்திருக்கிறார்.இந்திரா காந்தி படுகொலை ,பாபர் மசூதி இடிப்பு ,ஆபரேஷன் ப்ளூ ஸ்டார், ரத யாத்திரை , நெருக்கடி நிலை பிரகடனம் என சில இந்திய வரலாற்று உண்மைகள் கதையில் கடந்து செல்கின்றன. 
வலுவற்ற கால்கள் உள்ள அந்த சிறுவனின் மனதில் பதிந்து விடக்கூடாது என்பதற்காக மதமோதல்களை மலேரியா காய்சசல் என சொல்லி மகனை வளர்க்கிற தாய் இந்த படத்தில் சிறந்த கேரக்டர்.
மனதில் இடம் பெற்றுவிட்ட ரூபாவின் பெயரில் பனியன் ஜட்டி தயாரிக்கிற கோடீஸ்வரர் லால்சிங் இரண்டாம் வகுப்பு ரெயிலில் பயணித்த படியே முழுக்கதையையும் சொல்லி விடுகிறார்.உண்மையிலேயே அது நமக்கு சத்திய சோதனைதான்.!
தொடக்கத்தில் டைட்டில் காட்சியில் பறந்து வருகிற வெண்ணிற இறகு எங்கெல்லாமோ பறந்து ,விழுந்து ,அடிபட்டு பயணித்து இறுதியாக அமீர்கானின் காலடியை வந்து சேரும். இதுதான் அமீர்கானின் பயணம்.வலிகள் நிறைந்தது என்றாலும் அதை அவர் பொருட்படுத்தவில்லை. 
கதையில் சொல்வதைப்போல லால் அதி புத்திசாலி இல்லை.முழு வளர்ச்சி அடையாதவனாகவே பார்க்கப்படுகிறார். அந்த காலக்கட்டங்களுக்கு ஏற்ப உடலை மாற்றி அமைத்துக்கொண்டு சிறப்பு சேர்த்திருக்கிறார்.சில காட்சிகளில் அவரது முந்தைய படமான பிகே வை நினைவுபடுத்துகிறார் .நட்பு ,காதல் என அமீர்கான் வாழ்ந்திருக்கிறார். கொச்சைப் படுத்தாமல் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட அமீர்கானைப்போலவே கரீனா கபூரின் கேரக்டரும் அமைந்திருக்கிறது. கிளாசிக் என காதல் ,மோதல் என எல்லாமே ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது. வக்கிரமான காட்சிகள் இல்லை.முத்த காட்சிகளும் இயல்பாகவே நடக்கின்றன.கிளர்ச்சி ஊட்டுவனவாக அமையவில்லை. கரீனாவின் சிறப்பான நடிப்பை பாராட்டுகிறபோது மோனா சிங்கை கட்டாயம் இணைத்துக்கொண்டேயாகவேண்டும் .நேர்த்தி ,சூப்பர்.!
அத்வத் சந்தன் இயக்கியிருக்கிறார்.ஒளிப்பதிவு, வி எப் பெக்ஸ் என சிறப்புகள் சேர்த்து வந்திருக்கின்றன.
காவியக்காதல் வகையை சேர்ந்த இந்த படத்தில் இட்லி சாம்பார் ,பானி பூரி என்று இடங்களின் தன்மைக்கு தகுந்தாற்போல் சொல்லியிருக்கிறார்கள்.தமிழகத்தில் திரையிடும் பொறுப்பு உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்கு.
குறைந்த நேரத்துக்கு பழகிப்போன நமக்கு படத்தின் நீளம் ஒரு குறைதான். அதுவே சுலோ என்கிற உணர்வுக்கு அடித்தளமாகிவிடுகிறது.












