
படம் பார்த்தமா சந்தோஷமா சிரிச்சமா வீட்டுக்கு திரும்புனமான்னு மகிழ்ச்சியா இருந்தது இந்த கட்டா குஸ்தி படத்திலதான்.!
கதைக்கு கதையுமாச்சு ,கலகலப்புக்கு கலகலப்புமாச்சுன்னு இருந்தது.
விஷ்ணு விஷாலுக்கு மாமா கருணாஸ்,ஐஸ்வர்யா லட்சுமிக்கு சித்தப்பு முனீஸ்காந்த்,இவங்க ரெண்டு பேர் நட்புல விஷ்ணு -ஐஸ்வர்யா கல்யாணம் நடந்திருச்சு.
மாப்பிள்ளை விஷ்ணு விஷாலுக்கு போதிய படிப்பு அறிவு இல்லை. ஏழாம் கிளாஸ். அதனால பொண்ணு அதிகம் படிச்சவளா இருக்க கூடாது. பொண்ணுக்கு தலை முடி இடுப்புக்கு கீழே வரை இருக்கணும்னுங்கற கண்டிஷனுக்கு பொய்ய சொல்லி ஐஸ்வர்யா லட் சுமியை கல்யாணம் பண்ணிக்கொடுக்கிறாங்க.
இதனால என்ன வம்பு தும்பு வருதுங்கிறத காமடியா சொல்லி இருக்கார் டைரக்டர் செல்ல அய்யாவு..!இவருடைய எந்த கேரக்டரும் வெட்டின்னு சொல்ல முடியாத அளவுக்கு கதைக்கு பக்க பலமா இருக்காங்க.காளி வெங்கட் ,ரெடின் கிங்ஸ்லி,
எங்க குஸ்தியையே காட்டி கதையை ஒப்பேத்திருவாங்களோ என்கிற பயம் படம் பாக்கிறதுக்கு முன்னாடி இருந்துச்சு.ஆனா பார்த்த பிறகு பயம் போயே போச்சு.!
பொண்ணு பாலக்காடு .பள்ளி பருவத்திலேயே குஸ்தி போட்டியில் ஏக்க சக்க மெடல். பாப் கட்டிங்.அழகு.பி.எஸ் சி படிப்பு.இதையெல்லாம் மறைச்சு கல்யாணம் நடக்குது .முதலிரவில் குட்டு வெளிப்பட்ருமோங்கிற பயம்..சவுரி முடியோடு ஐஸ்வர்யா அல்லாடுற இடம் சூப்பர். “சாந்தி முகூர்த்தம் நடந்திருக்கு தலை குளிக்காம போகலாமுன்னு “புருஷன் சொன்னதும் பாத்ரூமுக்கு திரும்பி சவுரிக்கு ஷாம்பு போடுற சீன் இருக்கே அட்டகாசம். கோவில் திருவிழான்னா அங்க ஒரு சண்டையை வைக்கணும்கிறது தமிழ் சினிமா பாலிசி. இதிலேயும் புழுதி பறக்கிற சண்டை. ஆனா கதைக்கு திருப்பு முனையா அமையுது.
புருஷனை கூட்டு சேர்ந்து அடிக்கிறதை எப்படி பொண்டாட்டி சகிப்பா? ஐஸ்வர்யா லட்சுமி புடவையை தூக்கி கட்டிட்டு எதிரிகளை பந்தாடுகிற போது சவுரி முடி ஒரு பக்கம் பறக்குது. புருசனுக்கு ஷாக். புரட்டி புரட்டி அடிக்கிறத பார்த்ததும் அவனுக்கு அதிர்ச்சி.கேமராமேன் ரிச்சர்ட் எம் நாதனுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யணுங்க.!எங்க ஸ்லோ மோஷன்,வைக்கணும் எங்கே ஸ்பீடை கூட்டணும்கிறதை மனுஷன் அட்டகாசமா படத்தில காட்டியிருக்காரு.இந்த படத்துக்கு ஒளிப்பதிவு மிகப்பெரிய பிளஸ்.
அந்த சண்டையினால கணவனை காத்த மனைவிக்கு ஊர்ல பெரிய மரியாதை.இது தனக்கு பின்னடைவுன்னு விஷ்ணு நினைக்கிறார்.அவருடைய கண்டிஷன்லாம் காத்துல பறந்து போனதால எரிச்சல் பொறாமை. பத்தாக்குறைக்கு ஒன்னுக்கும் உதவாத மாமன் கருணாஸின் தூண்டுதல் ,குடும்பம் உடையிது .ஐஸ்வர்யா ரிட்டர்ன் டு பாலக்காடு. மாமன் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புறான் .இதுக்குப்பிறகு ஐஸ்வர்யா எடுக்கிற முடிவு ,விஷ்ணு விஷாலின் தீர்மானம்னு படம் எக்ஸ்பிரஸ் வேகம் எடுக்குது.
விஷ்ணு விஷாலுக்கு இடைவேளைக்குப் பிறகுதான் வேலை அதிகம். நல்லாவே பீல் பண்ணி நடிச்சிருக்கார் .அழகான மனைவி அமைஞ்சதால எந்த அளவுக்கு பெருமைப் படுறாரோ அந்த அளவுக்கு துயரத்தையும் வெளிக்காட்டியிருக்கார்.மனைவி கர்ப்பிணின்னு தெரிஞ்சதும் அவகிட்ட மோதனுமான்னு பின் வாங்கிறதும் சூப்பர் .
ஆனா சினிமா வில்லனுகதான் கடைசி சீன்ல ரகசியத்தை ஓப்பன் பண்ணுவாய்ங்க. இந்த படத்து வில்லன் மட்டும் விதி விலக்கா? விஷ்ணுவுடன் சண்டை போட்டுக்கிட்டே “உன் பொண்டாட்டி கர்ப்பிணி. உன்னோடு குஸ்திபோட அவளை வளைச்சுப்போட்டது நான்தான்”ன்னு சொல்ல ,விஷ்ணுவுக்கு ஜிவ்ன்னுஏறுது வெறி. கோதாவுலேயே அவனை புரட்டி அடிக்கிற சீன்ல நான் விசில் அடிச்சான் குஞ்சாகவே மாறிட்டேன்.
ஜஸ்டின் பிரபாகர் இசை ,பின்னணி எல்லாமே இசைவாகவே இருக்கிறது.ஆனா பாடல்கள் அதிகம்னு தோணுது.
கருணாசுக்கு இந்த படம் கை கொடுக்கும்..முனீஸ்காந்த் அந்த தொந்தியை வச்சுக்கிட்டு சிறப்பா எல்லாப்படங்களிலுமே நல்லபேரு வாங்கிடறார்..காளி வெங்கட் வழக்கம் போல.!
டிசம்பர் மாத ரிலீஸில் முதல் படமாக கோதாவில் இறங்கி சிறப்பா வெற்றி கோப்பையை கைப்பற்றிய படம் கட்டா குஸ்தி.
–தேவிமணி












