ஓப்பன் கேட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் வழங்கும், டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, இனியா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 25 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தூக்குதுரை’. இதன் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது
.இந்நிகழ்ச்சியில்,நடிகர் மகேஸ் சுப்ரமணியன் பேசுகையில் , “இந்த மேடை எனக்கு 15 வருட கனவு. இந்தப் படம் எனக்கு முதல் படம். எனக்கு வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் மூன்று பேருக்கும் நன்றி. சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவனை நம்பி சினிமாவில் வாய்ப்புக் கொடுத்திருந்தார்கள். இந்த சமயத்தில் அன்பு சாரை நான் மிஸ் செய்கிறேன். எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்திருக்கிறார். உங்கள் ஆசீர்வாதத்தோடு இந்தப் படம் நிச்சயம் வெற்றிப் பெறும். பல போராட்டங்களைத் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நிச்சயம் மீடியா மற்றும் மக்கள் ஆதரவு தேவை. என்னைப் புதுமுகமாக பார்க்காமல் ஆதரவு கொடுத்த படக்குழுவினர், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் டெனிஸ் இல்லை என்றால் நான் இல்லை. நான் நடிக்க நினைத்த விஷயத்திற்கு எந்தத் தடையும் சொல்லாமல் ஆதரவு கொடுத்தார். படம் நிச்சயம் வெற்றிப் பெறும். சினிமாவில் வரவேண்டும் என ஆசைப்பட்ட விஷயம் இன்று நடந்திருக்கிறது. படமும் சிறப்பாக வந்திருக்கிறது. குடும்பத்தோடு வந்து பார்த்து ஆதரவு கொடுங்கள்”.
இணைத் தயாரிப்பாளர் வினோத்குமார், “இந்தப் படம் இவ்வளவு பெரிதாக வர முக்கிய காரணம் அன்பும் அரவிந்தும்தான். நாங்கள் மூன்று பேரும் நண்பர்கள். இந்த நட்புதான் படம் செய்யும் அளவுக்கு வந்தது. பத்துவருடத்திற்கு முன்னால் நாங்கள் பேசிய விஷயம் இப்போது நிஜமாகி இருக்கிறது. ‘முத்தழகு’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்த மகேஸ் இதில் லீடாக நடித்திருக்கிறார். படத்தில் உள்ள மற்ற நடிகர்கள், சிறந்த அவுட்புட் கொடுத்த தொழில்நுட்பக் குழுவினர்கள் அனைவருக்கும் நன்றி. கிளைமாக்ஸ் போர்ஷனில் படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் அனைவரும் இணைந்து நடிக்கும்படியான ஒரு காட்சி. செட் போட அதிக பட்ஜெட் தேவைப்பட்டது. அரவிந்திடம் கேட்டபோது, தரமான படமாக வரவேண்டும், படத்தை யாரும் குறை சொல்லக் கூடாது என்பதற்காக உடனே சம்மதித்தார். நடிகர்கள் தேதி கிடைத்ததும், இரண்டு நாட்களில் ஈவிபியில் பிரம்மாண்டமான செட் போட்டு அசத்தினார் கலை இயக்குநர் பாக்யராஜ். இந்த ஆக்ஷன் காட்சிகளில் நடிகர்களும் சிறப்பான ஒத்துழைப்புக் கொடுத்தனர். இந்தப் படத்தில் ஸ்ரீதர் மாஸ்டரும் சிறப்பான பாடலைக் கொடுத்துள்ளார். நிச்சயம் அந்தப் பாடல் குழந்தைகளுக்குப் பிடிக்கும். ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.
தயாரிப்பாளர் அரவிந்த், “இந்தத் தருணத்திற்காக நாங்கள் பல வருடம் காத்திருந்தோம். நண்பர்களாக நாங்கள் பேசி உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம்தான் இது. அமெரிக்காவில் பல வருடங்கள் வேலை பார்த்ததால், இந்தியாவை மிஸ் செய்ய ஆரம்பித்தேன். இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய காரணமும் அதுதான். அன்பு என்னுடைய சகோதரர் போன்றவர். அவர் இருக்கும் தைரியத்தில்தான் சினிமாவுக்கு வந்தேன். இவ்வளவு பெரிய விஷயத்தையும் தொடங்கினோம். ஆனால், இந்த மேடையில் அன்பு இல்லை. நிச்சயம் அவரது ஆசீர்வாதம் இருக்கும். நாங்கள் புதியவர்கள் என்பதால் யோகிபாபு, இனியா, மாரிமுத்து, பால சரவணன் என அனுபவசாலிகளை வைத்துக் கொண்டோம். மாரிமுத்து சார் எங்களுக்கு சிறப்பான ஆதரவைக் கொடுத்தார். அதை நாங்கள் மறக்க மாட்டோம். அவர் இந்நேரம் இருந்திருந்தால் இந்த மேடை இன்னும் பெரிதாகி இருக்கும். அவரை மிஸ் செய்கிறோம். பாலசரவணன், அஸ்வின், சென்றாயன், மகேஸ் என நடிகர்கள் அனைவரும் எங்களோடு நட்போடு பழகி படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளனர். இயக்குநர் டெனிஸூம் சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டவர். எங்களை எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். தொழில்நுட்பக் குழுவினரும் ஆர்வமாக உழைத்துக் கொடுத்துள்ளனர். எங்கள் நிறுவனத்திற்கும் ஆர்வத்திற்கும் நீங்கள் ஆதரவு கொடுத்து வெற்றிக் கொடுக்க வேண்டும்” என்றார்.
இயக்குநர் டெனிஸ் மஞ்சுநாத், “தயாரிப்பாளர் அன்பு மற்றும் நடிகர் மாரிமுத்து எங்கள் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே பயணித்தார்கள். ஆனால், அவர்கள் இப்போது எங்களோடு இல்லை என்பது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. படத்தை பிப்ரவரி 9 அன்று வெளியிட திட்டமிட்டோம். ஆனால், அதன் பிறகு நிறைய பெரிய படங்கள் இருக்கிறது என்பதால், சீக்கிரமாக எடுத்த முடிவு தான் இந்தப் பட ரிலீஸ். அதனால், படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் பலரால் இன்று நிகழ்வுக்கு வரமுடியவில்லை. தயாரிப்பாளர்கள் அன்பு, அரவிந்த், வினோத் மூவரும் இந்தப் படத்திற்காக அவ்வளவு உழைத்துள்ளனர். கிராமம், நகரம் எனப் பல்வேறு லொகேஷனில் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் குடும்பத்தோடு ஜாலியாக நீங்கள் படம் பார்க்கலாம். மல்டி ஸ்டார்ஸ் வைத்து படம் எடுப்பது கடினமானது இல்லை என என் படக்குழு எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படம் ஜனவரி 25 அன்று வெளியாகிறது. படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.













