கடந்து விட்ட வாழ்க்கை, அதன் வலி ,சுகம் ,வந்து போன உறவுகள் இவை எல்லாமே மறுபடியும் கிடைக்கப்பெற்றால்? யான் பெற்ற அந்த இன்பத்தை உற்றமும் சுற்றமும் அறியட்டும் ..மெய்யழகன் பார்த்து முடிந்ததும் , இருக்கையை விட்டு எழ மனமின்றி என் கண்களில் ஓடியது இதுதான் , முந்தைய மதுரை ,அதாவது 1940 களில் இருந்த மதுரை. மூளைப் பெட்டகத்தில் காக்கப்பட்ட பழைய நினைவுகளை கார்த்தி, அரவிந்தசாமி இருவரும் திறந்து விட்டார்கள். வீடு திரும்பிய பின்னர்தான் மெய்யழகனை ரிவைன்ட் செய்ய முடிந்தது..
கிராமத்தான் கேரக்டர் அரவிந்த சாமிக்கு எப்படி பொருந்தியது?அவர் இந்தப் படத்தில் அருள்மொழியாக மாற்றம் பெற்றது ஆச்சரியமாகவே இருக்கிறது எனக்கு.!திறமையுள்ளவனுக்கு எல்லா கேரக்டர்களுமே சுலபமாகிவிடும் ,என்பார்கள். ஆனால் அர்ப்பணிப்பு அவசியம். அது அரவிந்தசாமியிடம் இருக்கிறது போலும் . கார்த்தி காட்டுகிற அன்பு அரவிந்தசாமியின் உணர்வுகளை மேம்படுத்தியிருக்கிறது.
கதை தொடங்கி வெகுநேரம் கழித்துதான் கார்த்தி என்ட்ரி. “அத்தான் ,”என்று அ . சாமியின் கண்களைப் பொத்திவிட்டு “நான் யார்னு தெரியுதா ?”என்று கேட்பவர் அதன்பின்னர் காட்சிகளை அழகாக கடத்துகிறார். பொதுவாக திரைப்படங்களில் “அத்தான் “என்று பேசுகிற வசனம் பெண்களுக்கே என்று 50 களில் கருதப்பட்டது. ஆனால் அந்த காலத்தில் அத்தான் முறை போட்டு ஆண்களையும் அழைத்தனர். நல்லவேளை அம்மான் என்கிற உறவுச் சொல் மறைந்துபோனதைப்போல அத்தான் மறையவில்லை. அந்த காலத்தில் உறவுகளை எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் என்பதை படத்தில் பார்த்தபோது ஆங்காங்கே கண்கள் என்னையறியாமலேயே பனித் தது.
கதை நெடுகிலும் கார்த்தியின் அமர்க்களத்தில் ஆடியன்ஸ் கலந்து போனதை ஆரவார சிரிப்புகள் வெளிக்காட்டின .உள்ளத்தில் கள்ளம் கபடம் இல்லாமல் கார்த்தி பேசும்போது வருகிற வார்த்தைகள் நம் நெஞ்சை கீறி விடுகின்றன. “உங்க நம்பரை நீங்க எப்படி தப்பா சொல்வீங்க ?”என்று வெள்ளந்தியாக அவர் கேட்கிறபோது அதை நாம் உணரமுடிகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீ திவ்யா தலை காட்டியிருக்கிறார். கார்த்தியின் மனைவியாக சிறப்பான நடிப்பு. அரவிந்த்சாமியின் மனைவியாக நடித்திருக்கும் தேவதர்ஷினியை பற்றி சொல்லவே வேண்டாம். இப்படி ஒரு மனைவி நமக்கு அமையவில்லையே என பலர் வருந்தக்கூடும்.
பாசமும் நேசமும் கூடிய கதைகளில் மாறுபட்ட கேரக்டர்கள் வருவது இயல்பு. ராஜ்கிரண் ,ஜெயபிரகாஷ் ,இளவரசு ஆகியோர் அவைகளை நிறைவு செய்திருக்கிறார்கள். முற் பாதியைப் போல பின் பாதி இல்லை என்கிற குறை வருவதற்கு எடிட்டர் ஆர். கோவிந்தராஜ் வாய்ப்பு தந்திருக்கக் கூடாது. கத்தரியை பயன்படுத்தி இருக்கலாம் .
மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவு ,கோவிந்த்வசந்தாவின் இசையில் ஓரிரு பாடல்கள் காட்சிகளோடு இணைந்து பயணிக்கின்றன.
வசனங்களால் காட்சிகளை கடத்த முடியும் ,ஆனால் வார்த்தைகளில் வலிமை இருந்தாகவேண்டும். என சீன்களை பிரிப்பவர் இயக்குநர் சி.பிரேம்குமார் என்கிற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். இது அவருக்கு உடன்பாடா ,அல்லவா என்பது எனக்கு தெரியாது. ஆனால் மெய்யழகன் நேசிக்கப்படவேண்டியவன் . வென்றாகவேண்டும் .
–தேவிமணி.