சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே தனித்துமானவை. வெவ்வேறு கதையம்சம் கொண்ட படங்களாகடைருக்கும். அந்த வகையில், காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ‘2K லவ் ஸ்டோரி.’ யும் தனித்துவமாக இருக்கிறது. காதலர் தினத்தில் ஆண், பெண்ணின் நட்பினை கௌரவப் படுத்தும் படமாக இந்தப்படம் அமைந்திருக்கிறது.
சின்னஞ்சிறு வயதிலிருந்தே (ஜெகவீர்) கார்த்திக்கும் – (மீனாட்சி கோவிந்தராஜன்) மோனிகாவும் நண்பர்களாக பழகி வருகின்றனர். பள்ளிப்பருவத்தில் தொடங்கிய நட்பு, கல்லூரி படிப்பிற்கு பின் ஒன்றாக தொழில் செய்யும் அளவிற்கு இவர்களின் நட்பு மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறது. நெருக்கமான சக நண்பர்களைத் தவிர, எல்லோரும் இவர்களை காதலர்களாகவே நினைக்கின்றனர்.
இந்நிலையில், கார்த்திக் – மோனிகா படித்த கல்லூரியின் ஜூனியர் (லத்திகா பலமுருகன்) பவித்ரா, கார்த்திக்கை காதலிக்கிறார். இருவரும் சந்தோஷமாக இருந்துவரும் நிலையில், கார்த்திக்குடன் பைக்கில் செல்லும்போது, விபத்தில் சிக்கி மரணமடைகிறார் பவித்ரா.
மாதங்கள் பல சென்ற நிலையில், கார்த்திக் – மோனிகா இருவருக்கும் அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். இந்த திருமணத்திற்கு இருவரும் சம்மதித்தார்களா? இல்லையா? என்பது தான், ‘2கே லவ் ஸ்டோரி’.
‘2கே லவ் ஸ்டோரி’, இன்றைய இளம் தலைமுறையினரின் காதல், காதல் பிரிவு, நட்பு, திருமணம் குறித்த புரிதல் என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் ஒரு மரியாதையான படைப்பாக உருவாகியிருக்கிறது.
ஒரு பையனும், பொண்ணும் ஒன்னா சேர்ந்து பழகினால். அது காதல் மட்டுமே. என்ற சமூகத்தின் பார்வையை மாற்ற முயற்சித்திருக்கிறது, இந்த படம்.
தேவையற்ற கவர்ச்சித் திணிப்பு, ஆபாசம், அருவருப்புகளற்ற, இளைஞர்களை கவரும் வகையில், அழகான திரைக்கதை மூலம் இன்றைய இளைஞர்களின் நட்பினை கௌரவப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் சுசீந்திரன். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஜாலியாக, சில இடங்களில் சில தொய்வுகள் இருந்த போதும், அது பால சரவணனின் காமெடியால் ஈடு செய்யப்படுகிறது.
‘2K லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் சாயலில் சில படங்கள் இதற்கு முன்னர் வந்திருந்தாலும், இப்படம் தனித்தே நிற்கிறது. படத்தின் பெரும் பலமே க்ளைமாக்ஸ் தான்.
ஒளிப்பதிவு, எடிட்டிங் சிறப்பு.
டி. இமானின் பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.
லவ், எமோஷன்ஸ், காமெடி என எல்லாமும் சரியாக தொக்குக்கப்பட்ட திரைக்கதை ரசிக்கும்படி இருக்கிறது.
நடிகர்கள், நடிகைகளின் நடிப்பினை பற்றி குறை சொல்ல எதுவுமில்லை. இருந்தாலும் வரிசை படுத்தினால், பவித்ராவாக நடித்த லத்திகா பலமுருகன், மோனிகாவாக நடித்த மீனாட்சி கோவிந்தராஜன், கார்த்தியாக நடித்த ஜெகவீர் ஆகியோர் இடம்பிடிக்கிறார்கள்.
இடைவேளைக்கு பின்னர், பாலசரவணன், சிங்கம்புலி இவர்களுடன் நடித்தவர்கள் சிரிக்க வைக்கிறார்கள்.
மற்றபடி, திரைக்கதையின் வேகத்தை இன்னும் அதிகரித்து இருக்கலாம்.
மொத்தத்தில், ‘2K லவ் ஸ்டோரி’ இளைஞர்களின் மனதை கவரும்! அனைவரும் பார்க்கலாம்.