அஜித் நடிப்பில் வெளியான ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சோனா ஹைடன். கடந்த இருபது வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் கவர்ச்சி மற்றும் வில்லி வேடங்களில் நடித்து வரும் இவர் தற்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் பதிவாக உருவாகும் ‘ஸ்மோக்’ என்கிற வெப் தொடரை தயாரித்து வருகிறார்.முன்னணி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இதில், முகேஷ் கன்னா, ஆஸ்தா அபே, இளவரசு, ஜீவா ரவி என பலர் நடித்துள்ளனர்.
இந்த வெப் தொடருக்கு எதிராக,இந்த வெப் சீரிஸை தொடரக்கூடாது, அதை வெளியிடவும் கூடாது என பலர் கடுமையான எச்சரிக்கை விடுத்ததாகவும், பல அவமானங்களை சந்தித்ததாகவும் கூறியுள்ள நடிகை சோனா தற்போது சென்னை வடபழனி 100 அடி உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி அலுவலகம்) முன்பு சோனா திடீரென தர்ணா போராட்டத்தில் இறங்கி உள்ளார். அவர் கூறுகையில், ‛‛நான் எடுத்த ‘ஸ்மோக்’ பயோபிக் படத்தின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்து வைத்துக் கொண்டு தர மறுக்கிறார்கள். எங்களிடம் மேலாளராக வேலை பார்த்த ஷங்கர் என்பவர் ரூ.8 லட்சம் வரை என்னிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதுபற்றியும் நடவடிக்கை எடுக்குமாறு பெப்சியிடம் முறையிட்டு இருந்தேன். இது நம்ம குடும்பமாச்சே நமக்கு உதவுவார்கள் என்று இருந்தேன். ஆனால் இதுவரை உதவவில்லை. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு என் ஹார்ட் டிஸ்க், எனது பணம் வர வேண்டும். அதுவரை எத்தனை நாட்கள் ஆனாலும் தினமும் வந்து நான் போராடுவேன்” இவ்வாறு சோனா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.













