முன்னாள் முதல்வர் கருணாநிதி -பத்மாவதி தம்பதியின் மகனும் பிரபல நடிகருமான முக முத்து ( வயது 77) உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.இந்நிலையில், மு.க.முத்துவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ் டாலின் அஞ்சலி செலுத்தினர்
அவரது உடல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு மகனாக பிறந்த மு.க.முத்து 1970-களில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ‘பிள்ளையோ பிள்ளை’, ‘சமையல்காரன்’, ‘அணையாவிளக்கு’, ‘இங்கேயும் மனிதர்கள்’ ‘பூக்காரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தான் நடித்த படங்களில் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். திமுக மேடைகளிலும் கட்சியின் கொள்கை விளக்க பாடல்களை பாடியுள்ளார்.மறைந்த நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் களமிறக்கப்பட்டவர் என்ற பொதுவான கருத்து நிலவினாலும், மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்து கிளாப் அடித்து எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். கடந்த 2006-ஆம் ஆண்டு தேவா இசையில் ’மாட்டுத் தாவணி’ என்ற படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார் மு.க.முத்து.முக முத்து மரணத்தை தொடர்ந்து முதலமைச்சர் முகஸ்டாலின் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.












