பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அய்யா’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி நடித்துள்ள சேரன் இயக்குகிறார். இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு என்ற கருப்பொருளுடன் உருவாக உள்ளதாக கூறப்படும் இப்படத்தில் டாக்டர் ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் ஆரி நடிக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஏகாம்பரம் கவனிக்க,சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்து வருகிறார் இப்படத்தை தமிழ்குமரன் புரடக்சன் படநிறுவனம் சார்பில் ஜி.கே.எம் தமிழ்குமரன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் டாக்டர் ராமதாஸ் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, மருத்துவம், ஏழை மக்களுக்கு சேவை செய்யும் விதத்தில் சொந்தமாக கிளினிக் ஒன்றை தொடங்கி இரண்டு ரூபாய் ,மூன்று ரூபாய் என மிக குறைந்த கட்டணத்தில் சேவை செய்தது மற்றும் தான் சார்ந்த வன்னியர் சமுதாயத்தின் பின் தங்கிய நிலையை பற்றி சிந்திக்கத் தொடங்கியதுடன், அவர்களின் ஏழ்மை நிலையை அகற்றி கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த சமுதாயமாக மாற்ற வேண்டும் என முடிவு எடுத்தது, கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்றது, முதல் வெற்றி பெற்றது என பல சுவாரசிய நிகழ்வுகள் இடம்பெறும் என தெரிகிறது













