அர்ஜூன் அசோகனும், ஜியா சங்கரும் காதலர்கள். இருவரது ஒரே விருப்பம், லண்டனில் நடக்கும் இசைக் குழுக்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவது. இதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். மதும்கேஷ், ஜியா சங்கரை ஒரு தலையாக காதலித்து வருவதுடன், அவரை நிழல் போல் தொடர்ந்து வருகிறார். மூவரும் லண்டன் செல்கின்றனர். அங்கே, அர்ஜூன் அசோகன், தன்னை ஏமாற்றி விட்டதால் தற்கொலைக்கு முயல்கிறார், ஜியா சங்கர். அவரைக்காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார், மதும்கேஷ். மருத்துவமனையில் கண் விழிக்கும் ஜியா சங்கர் மூளையில் அடிபட்டதன் காரணமாக, ஒரு நாளில் நடந்தவையை மட்டுமே நியாபகம் வைத்துக்கொள்ளும் அளவில் அவர் பாதிக்கப்படுகிறார். தூங்கி எழுந்தால் முந்தைய நாளில் நடந்தவற்றை மறந்து விடுவார்.
மதும்கேஷ் ஒவ்வொரு நாளும் காதலனாக நடித்து அவரது சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இந்நிலையில், அர்ஜூன் அசோகனின் குழுவிலிருந்த ஜியா சங்கர் இடம் பெற்றால் தான், தனது குழு அங்கீகாரம் பெறும் சூழ்நிலையில் ஜியா சங்கரை சந்திக்கிறார், அவர். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘காதல் ரீசெட் ரிப்பீட்’.
இது நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம். நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ஜியா சங்கருக்கு நடிப்பதற்கான காட்சிகள் ஏராளம். அதை அவர் நன்கு பயன்படுத்தியுள்ளார். அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை எளிதில் ஈர்த்து விடுகிறார்.
நாயகர்களாக நடித்திருக்கும் மதும்கேஷ், அர்ஜூன் அசோகன் இருவரில், மதும்கேஷ் அதிஅக வசங்கள் இல்லாமல் நடித்திருக்கிறார், அர்ஜூன் அசோகனுக்கு அதிக வசனங்கள். மிகையான நடிப்பு. ஜியா சங்கரை கடத்தும் காட்சிகள் அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை.
விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பலமாக இருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் சில இடங்களில் மனம் நிறைகிறார்.
வெளிநாட்டில் படமாக்கப்பட்ட அநேக காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஒளிப்பதிவாளர் அரவிந்த்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்தின் பலம். ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள், பின்னணி இசை திரைக்கதைக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.
முக்கோண காதல் கதையை, புதிய வடிவில் கொடுத்திருக்கும் இயக்குநர் விஜய், நம்பகமில்லாத காட்சிகளை தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். க்ளைமாக்ஸ், படத்தின் தலைப்பிற்கு வெகு பொருத்தம்!
‘காதல் ரீசெட் ரிப்பீட்’ – பார்க்கலாம்!












