‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில், விஜய் சேதுபதி தயாரித்து ‘ஜியோ ஹாட் ஸ்டார்’ டிஜிட்டல் தளத்தில், மார்ச் 27 ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பு ஆகிவரும்10 அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடர், ‘முத்து என்கிற காட்டான்’. இதில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, வடிவேல் முருகன், கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா ,பாலாஜி சக்திவேல் ,சிந்து, இர்ஷாத் அலி, அரிஸ்டோ சுரேஷ், சுனிதா சந்திரன், ஆர் அமரேந்திரன், சாதனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘காக்கா முட்டை’ மணிகண்டன் மற்றும் பி. அஜித் குமார் ஆகிய இருவரும் இயக்கியுள்ளனர். மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்க, ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார்.
மதுரையை ஒட்டியுள்ள மலைப்பகுதி கிராமம். அங்கு செயல்பட்டு வரும் காவல் நிலையத்தில் முத்துக்குமார், சிங்கம் புலி, ‘கோடங்கி’ வடிவேல் உள்ளிட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறைந்த அளவில் மக்கள் தொகை கொண்ட அந்த கிராமத்தில், போதிய வழக்குகள் இல்லாத நிலையில், அங்கு செயல்பட்டு வந்த காவல் நிலையத்தை மூடுவதற்கு காவல் துறை முயற்சிக்கிறது. அதற்கு, வடிவேல் முருகனைத் தவிர மற்ற காவலர்கள், தயாராகி வருகின்றனர். இந்நிலையில், வனாந்திர காட்டுப்பகுதியில் வெட்டப்பட்ட தலை (விஜய் சேதுபதி) ஒன்றும், அதனருகில் ஒரு பணப்பைய்யுடன் ஒரு கடிதமும் இருக்கிறது. அதில், ‘’இந்தத்தலையை அடக்கம் செய்து விட்டு பணத்தை எடுத்துக்கொள்ளவும்.’’ என எழுதப்பட்டிருக்க காவலர்கள் குழப்பமடைகின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘முத்து என்கிற காட்டான்’.
வெட்டப்பட்ட தலைக்கு சொந்தமான உடலைத்தேடியும், அதன் பின்னணி குறித்த போலீஸ் விசாரணை, மதுரை ஒட்டியுள்ள கிராமத்தில் தொடங்கி, கேரளா, மும்பை என விரிந்து செல்கிறது. கொலை செய்யப்பட்டவர், உயிருடன் இருக்கிறாரா, இல்லையா? ஏன் அவர் கொலை செய்யப்பட்டார்? போன்ற சுவாரசியமான கேள்விகள் உருவாகிறது. விஜய்சேதுபதி குறித்த ஃப்ளாஷ் பேக் காட்சிகள், அவர் நல்லவரா, கெட்டவரா? என கேட்கத்தோன்றும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. ஆனால், விறுவிறுப்பற்ற போரடிக்கும் காட்சிகள் பெரும் சலிப்பினை ஏற்படுத்துகிறது. காவல் நிலையத்துக்குள் பாம்பு புகும், முதல் காட்சியே குழந்தைத்தனமாக இருக்கிறது.
‘முத்து’ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி. தொடர் முழுவதும் ஒரே மாதிரியான ‘ஸ்டீரியோ டைப்’ நடிப்பு, சலிப்பினை கொடுக்கிறது. மிலிந்த் சோமனின் நடிப்பும் பெரிதாக ஈர்க்கவில்லை. மற்றபடி, சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா, சாதனா ஆகியோரில், வடிவேல் முருகன் அவரது அம்மாவாக நடித்த நடிகை, விஜே பார்வதி ஆகிய மூவரும் கவனம் ஈர்க்கிறார்கள். ஆனால், இவர்களது காட்சிகள் திரைக்கதைக்கு எந்த பலனையும் கொடுக்கவில்லை!
மதுரை, ஒட்டன்சத்திரம் அதன் சுற்றுப்பகுதிகள். கேரளா என படம்பிடிக்கப்பட்ட இடங்கள் அனைத்தும், மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. ஒளிப்பதிவு செய்த மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
இசை அமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசை ஓகே!
‘முத்து என்கிற காட்டான்’ – பெரிதாக ஈர்க்கவில்லை!












