மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரிக்க, பாரி இளவழகன் இயக்கத்தில் ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்திற்கான உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்,தயாரிப்பாளர் சத்யா காரிகாலன் பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். அன்பே டயானா திரைப்படத்தின் வெற்றியை கொண்டாட இன்று அனைவரும் ஒன்றுகூடியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நியோ கேசில் கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு இது முதல் திரைப்படத் தயாரிப்பு. நான் இதுவரை கல்வித் துறையில், குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுடன் பணியாற்றி வந்துள்ளேன். சினிமா எனக்கு ஒரு புதிய அனுபவமாக மட்டுமல்ல, அர்த்தமுள்ள ஒரு பயணமாகவும் அமைந்துள்ளது.
இந்தப் பயணத்தின் முதல் அடியிலிருந்து என்னை நம்பிக்கையுடன் ஊக்குவித்து வழிநடத்தியவர் திரு. சரவணன் சார். சிலர் ஒரு கதவு இருப்பதைக் காட்டுவார்கள், சிலர் அந்தக் கதவைத் திறந்து வைப்பார்கள். ஆனால் வெகு சிலர்தான் அந்தக் கதவுக்கு அப்பால் இருக்கும் உலகத்தை அறிமுகப்படுத்துவார்கள். அந்த வகையில், சினிமா உலகிற்குள் எங்களை அழைத்துச் சென்ற முக்கியமான நபர் சரவணன் சார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களின் முதல் தயாரிப்பிலேயே நம்பிக்கையுடன் கைகோர்த்து பயணித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் அந்த நிறுவனம், எங்கள் முதல் முயற்சியில் தோளோடு தோள் நின்றது மிகவும் நெகிழ்ச்சியளிக்கிறது. யுவராஜ் ஒரு தனி மனிதர் அல்ல; அவருக்குப் பின்னால் ஒரு வலுவான அணியே இருக்கிறது. நாங்களும் அவர்களுடன் இணைந்து ஒரே குடும்பமாக இந்தப் பயணத்தை தொடர்கிறோம்.
நல்ல புத்தகங்கள் ஒரு தலைமுறையின் சிந்தனையை மாற்றும் சக்தி கொண்டவை. அதுபோல, சிறந்த திரைப்படங்களுக்கும் சமூகத்தின் எண்ணங்களை மாற்றும் வலிமை இருக்கிறது என்று நான் நம்புகிறேன். மக்களை ஒன்றிணைத்து, மாற்றத்திற்கும் ஊக்கத்திற்கும் வழிவகுப்பதே சினிமாவின் உண்மையான நோக்கம்.
அந்த வகையில், இயக்குநர் பாரி இளவழகன் அன்பே டயானா படத்தில் காதல், சமத்துவம், தனிமனித சுதந்திரம் போன்ற கருத்துகளை யாருக்கும் போதனை செய்யாமல், நகைச்சுவையும் எளிமையும் கலந்த திரைக்கதையின் மூலம் அனைவரும் ரசிக்கும் வகையில் அழகாக சொல்லியிருக்கிறார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகை ரம்யா ரங்கநாதன், ஆங்கிலோ-இந்திய இளம்பெண்ணாக மிகவும் இயல்பாக வாழ்ந்திருக்கிறார். ரோஜா மேடம், சேத்தன் சார், கோபி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களாகவே மாறி சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்கும் என் நன்றிகள்.
ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது நடிகர்கள், இயக்குநர் ஆகியோரால் மட்டுமே உருவாகாது. அதன் பின்னால் உழைக்கும் உதவி இயக்குநர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரின் கூட்டு முயற்சிதான் அந்த வெற்றிக்கான காரணம். இந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்பே டயானா திரைப்படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் படத்தை கொண்டாடிய அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான நன்றிகள்.”

நடிகை ரம்யா ரங்கநாதன் பேசியதாவது:
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களின் மதிப்புமிக்க ஆதரவும், வருகையும் எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருக்கிறது.
இந்த வாய்ப்பை வழங்கிய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் யுவராஜ் சார், சரவணன் சார், நியோ கேசில் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சத்யா காரிகாலன் மேம் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்பே டயானா திரைப்படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்து வரும் வரவேற்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
‘மேஜிக்’ கதாபாத்திரத்தை என்னை நம்பி ஒப்படைத்த இயக்குநர் பாரி இளவழகனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், படத்தொகுப்பாளர் பார்த்தா, இசையமைப்பாளர் பரத் சங்கர், கலை இயக்குநர், பாடலாசிரியர்கள், பாடகர்கள், உடை வடிவமைப்பாளர் அபி மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. குறிப்பாக அபி வடிவமைத்த ஆடைகள் இந்தக் கதாபாத்திரத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்தன.
என்னுடன் நடித்த ரோஜா மேம், சேத்தன் சார், எனது தந்தையாக நடித்த டென்வர் சார் மற்றும் அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தைப் பார்த்த அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்கள் சிரித்து, கைதட்டி, ரசித்து கொண்டாடியதை நேரில் பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஒரு நடிகருக்கு தனது பெயரை விட, தான் நடித்த கதாபாத்திரத்தின் பெயரால் ரசிகர்கள் அழைப்பது மிகப்பெரிய அங்கீகாரம். ‘மேஜிக்’ என்று சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்னை அழைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக ஒரு சிறுமி ஓடிவந்து, “Hi Magic, you really look magical on screen” என்று கூறியதும், மற்றொரு குழந்தை “Bye Magic” என்று விடைபெற்றதும் என் மனதில் என்றும் நிற்கும் தருணங்கள்.
மேலும் பலர், ‘நீங்கள் உண்மையிலேயே ஆங்கிலோ-இந்தியப் பெண்ணாக இருந்தும் இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்களே’ என்று பாராட்டினார்கள். அந்த அன்பும் பாராட்டும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
படத்தில் கோபி அண்ணா, சேத்தன் சார் மற்றும் மற்ற நடிகர்கள் அனைவருக்கும் ரசிகர்கள் அளித்த வரவேற்பையும், குறிப்பாக இறுதிக்காட்சியில் இயக்குநர் பாரி இளவழகனுக்கு கிடைத்த கைதட்டலையும் பார்த்தபோது மிகவும் பெருமையாக இருந்தது.
இந்த வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தளமாக இருந்தது பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் ஆதரவு. பத்திரிகையாளர் காட்சிக்குப் பிறகு நீங்கள் எழுதிய கட்டுரைகள், விமர்சனங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் நான் தவறாமல் பார்த்தேன். படத்தைப் பற்றியும், ஒவ்வொருவரின் நடிப்பைப் பற்றியும் நீங்கள் எழுதிய நேர்மறையான விமர்சனங்கள்தான் முதல் வாரத்தில் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வந்தது என்று நான் நம்புகிறேன். அதற்காக உங்களுக்கெல்லாம் என் இதயப்பூர்வமான நன்றிகள்.
இந்தப் பயணத்தில் உங்களில் பலர் எனக்கு நண்பர்களாகவும் மாறியிருக்கிறீர்கள். அதுவும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.
பல போட்டி வெளியீடுகள் மற்றும் பிற சவால்கள் இருந்தபோதிலும், திரையரங்குகளில் ரசிகர்கள் தொடர்ந்து வந்து படத்தை ஆதரித்தனர். கடந்த வாரம் நான் அதிகம் பயன்படுத்திய செயலி BookMyShow தான் என்று சொல்லலாம். Instagram, WhatsApp ஆகியவற்றைவிட, திரையரங்குகளில் காட்சிகள் நிரம்பி வழிவதைப் பார்ப்பதற்காக BookMyShow-வை அதிகமாகப் பார்த்தேன்.
தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கையும், காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த வாரமும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் இதே அன்புடனும் ஆதரவுடனும் அன்பே டயானா திரைப்படத்திற்கு துணை நிற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.”
இயக்குநர் பாரி இளவழகன் பேசியதாவது:
இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம். வாழ்க்கையில் எல்லோரிடமும் எல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், நன்றியுணர்வு மட்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணம் நான் மட்டுமல்ல. இந்த அரங்கில் இருப்பவர்களும், இங்கு இல்லாமல் வெளியே இருந்து இந்தப் படத்திற்காக உழைத்த ஆயிரக்கணக்கானவர்களும் தான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரசனைகளும், கருத்துகளும் இருக்கும். ஆனால் அவற்றைத் தாண்டி, ஒரு நல்ல திரைப்படம் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு அன்பே டயானா திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சென்றது நீங்கள்தான். இந்தப் படத்தின் வெற்றிக்கு நீங்கள் அளித்த ஆதரவு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.
அதேபோல், ஜமா திரைப்படத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அளித்த ஆதரவை நான் மறக்க முடியாது. அந்தப் படம் வெளியானபோது உடனடியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அது நாளுக்கு நாள் மக்களிடம் சென்று சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அந்த நம்பிக்கையை நனவாக்கிய ரசிகர்களுக்கும், ஜமா படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மேடையில் நடிகர் விஜய் சேதுபதி சாருக்கு ஒரு சிறப்பு நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். அன்பே டயானா கதையை அவரிடம் பகிர்ந்தபோது, ‘உங்கள் தற்போதைய பயணத்திற்கு மில்லியன் டாலர் ஸ்டுடியோஸுடன் இந்தப் படம் சரியான கூட்டணியாக இருக்கும்’ என்று கூறி, தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷிடமும் என்னைப் பற்றி நல்ல விதமாக பேசியிருந்தார். அந்த நம்பிக்கைக்கும், ஊக்கத்திற்கும் விஜய் சேதுபதி சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. இந்தப் படத்தை நான் இயக்க வேண்டும் என்ற உறுதியுடன் ஆரம்பம் முதலே அவர் என் மீது வைத்த நம்பிக்கையே இன்று இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது. ஒரு இயக்குநருக்கு தனது எழுத்தின் மீது தயாரிப்பாளர் முழுமையான நம்பிக்கை வைப்பது மிகப்பெரிய வரம். அன்பே டயானா படத்தில் நான் எழுதிய ஒரு வசனத்தையோ, ஒரு காட்சியையோ மாற்ற வேண்டும் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. என் எழுத்தையும், என் பார்வையையும் முழுமையாக நம்பி எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். அந்த நம்பிக்கைக்காக அவருக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.”
“இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் குறித்து நான் ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாக இருந்தேன். எந்தக் கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் உறுதியாக இருந்தது. அந்த நம்பிக்கையை தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷ் முழுமையாக மதித்தார்.
கோபி இந்தக் கதாபாத்திரத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்பினேன். இன்று ரசிகர்கள் அவரை கொண்டாடுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதேபோல், ரோஜா மேம் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்ததே எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ஒரு சிறிய படக்குழுவிற்கு அவர் அளித்த ஆதரவு எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது.
ரம்யா ரங்கநாதன் கடைசி நேரத்தில் இந்தப் படத்தில் இணைந்திருந்தாலும், அவர் உழைப்பு அளவிட முடியாதது. முழு படப்பிடிப்பிலும் எந்தவித சிரமமும் கொடுக்காமல், மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அவரது உழைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பலரும் என்னிடம், ‘ஏன் அன்பே மேஜிக் என்று தலைப்பு வைக்காமல் அன்பே டயானா என்று வைத்தீர்கள்?’ என்று கேட்டார்கள். ‘மேஜிக்’ என்ற வார்த்தை படத்தின் உள்ளே மட்டுமே சிறப்பாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதை தலைப்பாக வைக்கவில்லை. கதை எழுதும்போதே அந்த வார்த்தை ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்படும் என்று நான் நம்பினேன். இன்று ரசிகர்கள் அந்தக் கதாபாத்திரத்தை ‘மேஜிக்’ என்றே கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதற்கு ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என்னுடைய இயக்குநர் குழுவினருக்கும் இந்த மேடையில் நன்றி சொல்ல விரும்புகிறேன். இணை இயக்குநர்கள் ராகேஷ், ராகுல், பிரசாந்த், தினேஷ், ராஜன், மதன் உள்ளிட்ட அனைவரும் இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள்.
குறிப்பாக ராகுல், தயாரிப்புக் குழுவிற்கும் எனக்கும் இடையே மிகப்பெரிய பாலமாக செயல்பட்டார். பல விஷயங்களில் எனது பணிச்சுமையை குறைத்து, தயாரிப்புக் குழுவுடன் சிறப்பாக ஒருங்கிணைத்து பணியாற்றினார். ராகேஷ் என்னுடன் முதல் படத்திலிருந்தே பயணித்து வருகிறார். அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் படத்தில் பாபா மணி செய்த பங்களிப்பை குறிப்பாக சொல்லியே ஆக வேண்டும். பெரும்பாலான காட்சிகள் நேரடி லொகேஷன்களில் படமாக்கப்பட்டதால், அனுமதி பெறுவது முதல் அனைத்து ஏற்பாடுகளையும் அவர் தனிப்பட்ட முறையில் மேற்கொண்டார். ஒவ்வொரு இடத்திற்கும் சென்று பேசி, அனுமதிகள், ஆவணங்கள், ஏற்பாடுகள் என அனைத்தையும் முன்கூட்டியே செய்து முடித்ததால், படப்பிடிப்பு மிகவும் சுலபமாக நடந்தது. தயாரிப்புக் குழுவின் சுமையையும் அவர் வெகுவாகக் குறைத்தார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. அதற்கு முக்கிய காரணமான வெங்கட்டுக்கு நான் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்தப் படத்தை ஒரு வேலை என்ற மனநிலையுடன் அல்ல, தனது சொந்தப் படமாக நினைத்து ஒவ்வொரு போஸ்டர், வீடியோ, தியேட்டர் விஜிட் என அனைத்தையும் முழு ஈடுபாட்டுடன் கவனித்தார். குறிப்பாக ரம்யா ரங்கநாதனின் மீதான அவரது அக்கறையும், அவருக்காக செய்த உழைப்பும் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. அந்த நட்பும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது.
அதேபோல், எங்கள் பி.ஆர்.ஓ. யுவராஜ் எந்த நேரத்தில் தொடர்புகொண்டாலும் உடனடியாக ஒத்துழைத்து, பத்திரிகையாளர் சந்திப்புகள் முதல் அனைத்து விளம்பர நடவடிக்கைகளையும் சிறப்பாக ஒருங்கிணைத்தார். அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”
…












