திருமண வயதைக் கடந்தும் தனக்கு ஒரு நல்ல பெண் அமையவில்லையே என்று ஏங்கித் தவிக்கும் இளைஞன் ராம் (ரியோ). இந்தச் சூழலில், பேரழகியான லீலா (வர்டிகா) அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார். லக் அடித்த மகிழ்ச்சியில் ராம் துள்ளிக் குதித்தாலும், லீலா அவருக்கு ஒரு விசித்திரமான நிபந்தனையை விதிக்கிறார். மாலை 6 மணிக்கு மேல் தான் எந்தச் சூழலிலும் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் என்றும், தன்னை 6 மணிக்கு மேல் சந்திக்கக் கூடாது என்றும் அவர் கறாராகக் கூறிவிடுகிறார். லீலாவின் அழகில் மயங்கியிருக்கும் ராம், வேறு வழியின்றி அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு காதலைத் தொடர்கிறார்.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல இந்த ‘மாலை 6 மணி’ நிபந்தனை ராமின் அன்றாட வாழ்க்கையில் ஏகப்பட்ட குளறுபடிகளையும், நடைமுறைச் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. ‘சின்னதம்பி’ திரைப்படத்தில் வரும் கவுண்டமணி கேரக்டர் போல லீலாவிற்கு ஒருவேளை மாலைக்கண் நோய் இருக்குமோ என்று ராமும், தியேட்டரில் இருக்கும் ரசிகர்களும் கணிக்கத் தொடங்க, அதற்கு முற்றிலும் மாறாக நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு அரிய பிரச்சினை நாயகிக்கு இருப்பது தெரியவருகிறது. அந்த அதிர்ச்சியூட்டும் உண்மை என்ன? அதைத் தொடர்ந்து நடக்கும் கல்யாண கலாட்டாக்களையும், காதல் போராட்டங்களையும் வயிறு குலுங்கும் நகைச்சுவையோடு விவரிக்கிறது இந்த ‘ராம் அன்ட் லீலா’.
இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் ராமச்சந்திரன் கண்ணன், எந்த ஆங்கிலப் படத்தை பார்த்து இந்த மையக்கருவை எடுத்தார் என்று தெரியவில்லை. ஏனெனில், இதே போன்றதொரு கருவோடு சில மாதங்களுக்கு முன்புதான் ஒரு திரைப்படம் வெளியானது. அப்படி சுட்ட கருவாக இருந்தாலும், அதைத் தமிழ் நடுத்தரக் குடும்பப் பின்னணியில் தமிழ் பார்வையாளர்களின் ரசனைக்கேற்ப ரசிக்கும்படியாகக் கொடுத்ததில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.
நமது யூகங்களைக் கடந்த நாயகியின் விசித்திரமான பிரச்சினை, கதையைச் சுவாரஸ்யமாக நகர்த்த உதவியுள்ளது. அந்தப் பிரச்சினைக்குச் சொல்லப்படும் பின்னணிக் கதையும் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது. ரகசியம் தெரிந்த பிறகு காதலர்கள் ஒன்று சேர்வதில் இருக்கும் சிக்கல், அந்தச் சிக்கலைத் தாண்டிய காதல் உணர்வு, இறுதிக்கட்டக் கல்யாணக் காட்சிகளைக் காமெடி கலாட்டாவாகக் கையாண்ட விதம் ஆகியவற்றின் மூலம் படத்தில் இருக்கும் சில ஆங்காங்கே இருக்கும் குறைகளை இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் மறக்கடித்துள்ளார்.
கல்யாணத்திற்காக ஏங்கும் ராம் கதாபாத்திரத்தில் ரியோ நடித்துள்ளார். படம் முழுக்க காமெடி கலந்த எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, தனக்குள் இருக்கும் ஒரு புதிய நடிகரைக் காட்ட முயற்சி செய்துள்ளார். பெண்கள் உலகம் பற்றி எதுவுமே தெரியாத ஒரு பக்கா அப்பாவியாக வலம் வரும் ரியோ, தனது உடல்மொழி மற்றும் டைமிங் டயலாக்குகள் மூலம் சிரிக்க வைக்கிறார். அவரது பல சில்மிஷங்களும், லூட்டிகளும் நடிகர் சிவகார்த்திகேயனின் ஆரம்பக்கால திரைப்படங்களை அப்பட்டமாக நினைவூட்டுகின்றன.
இருப்பினும், ஒரு சில உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் அவரது நடிப்பு சற்று ஓவர் டோஸாகத் தெரிவதைத் தவிர்த்திருக்கலாம். நாயகி வர்டிகா ஒவ்வொரு ஃபிரேமிலும் தேவதை போல் மிக அழகாகக் காட்சியளிக்கிறார். கனமான கதாபாத்திரம் என்றாலும், ஹீரோவிற்கு இணையாக இவருக்குத் திறமையை வெளிப்படுத்தப் பெரிய அளவில் வாய்ப்புகள் தரப்படவில்லை. இவரை ஒரு அழகான சிலையாகக் திரையில் காட்டுவதற்கே இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
இவர்களுடன் ராமின் அப்பாவாக சேத்தன், அம்மாவாக மாளவிகா அவினாஷ், தங்கையாக தாஃபியா அபு, மாமனாக வரும் முனீஷ்காந்த், நண்பனாக வரும் பாலாஜி தியாகராஜன், நாயகியின் அம்மாவாக தீபா வெங்கட், மாமனாக வரும் மாகாபா ஆனந்த் மற்றும் தாத்தாவாக வரும் காத்தாடி ராமமூர்த்தி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான தேர்வாக அமைந்து படத்திற்குப் பெரிய பலம் சேர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுனின் கேமரா ஒட்டுமொத்தப் படத்தையும் செம்ம கலர்ஃபுல்லாகவும், பளிச்சென்றும் காட்டியுள்ளது. குறிப்பாக, புதுமுக நாயகியைப் பளிச்சென்று திரையில் கொண்டு வர அவர் அசாத்தியமாக மெனக்கெட்டுள்ளார். அன்கிட் மேனனின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கதையோடு பயணிக்கும் மாண்டேஜ் பாடல்களாகவே வருகின்றன. அவை திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டும் மெலோடிகளாக இருப்பதோடு, தற்போதைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களுக்குப் பக்காவாகப் பொருந்தும் வகையில் அமைந்துள்ளன. அவரது மென்மையான பின்னணி இசையும் இதமாகப் பயணிக்கிறது. படத்தொகுப்பாளர் ஒய்.என்.சி.சிவா முதல் பாதியைச் சற்று மெதுவாக நகர்த்திச் சென்றாலும், இரண்டாம் பாதியை வேகமாக நகர்த்துவதோடு, நகைச்சுவைக் காட்சிகளைச் சரியான முறையில் தொகுத்துப் படத்தை கலகலப்பாகக் கொண்டு சென்றுள்ளார்.
ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் பிக்-அப் ஆகும் ‘ராம் அன்ட் லீலா’, லாஜிக் விஷயங்களைச் சற்று தள்ளிவைத்துவிட்டுப் பார்த்தால், வார இறுதியில் குடும்பத்தோடு தியேட்டருக்குச் சென்று ஜாலியாகச் சிரித்து மகிழும்படியான ஒரு கலகலப்பான கமர்ஷியல் பொழுதுபோக்குத் திரைப்படமாகும்!












