கல்யாண அறையில் ஆரம்பிக்கும் அதிரடித் திருப்பம்!காதல் தோல்வியின் வலியை மறக்க ஐந்து ஆண்டுகள் துபாயில் உழைத்துவிட்டு ஊர் திரும்புகிறார் நாயகன் ரிஷிகாந்த். ஆனால் அவர் வந்தவுடனேயே, அவரது சம்மதத்தைக் கூடக் கேட்காமல் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளைச் செய்து முடிக்கின்றனர். குடும்பக் கட்டாயத்திற்காக வேறு வழியின்றி திருமண மேடையில் ஏறும் அவருக்கு, அனிஷ்மா அனில்குமாருடன் திருமணம் முடிகிறது.
கதையின் அசல் திருப்புமுனையே முதலிரவு அறையில்தான் தொடங்குகிறது. தன் புதிய வாழ்க்கையைத் தொடங்க நினைத்து மனைவியிடம் அவர் பேச முயல, அனிஷ்மாவோ தன் காதலனுடன் ஊரை விட்டு ஓடத் திட்டமிடுகிறார். இந்த அதிரடி உண்மை நாயகனுக்குத் தெரியவரும் போது கதை சூடுபிடிக்கிறது. இதன் பிறகு ரிஷிகாந்த் எடுத்த முடிவு என்ன? அனிஷ்மாவின் காதல் கைகூடியதா அல்லது ரிஷிகாந்தின் திருமண வாழ்க்கை ஜெயித்ததா? என்பதை கிராமத்து மனிதர்களின் எதார்த்த வாழ்வியலோடும், நகைச்சுவையோடும் விவரிப்பதே இந்த ‘மொத ராத்திரி’.
திருமண நிகழ்வில் தொடங்கும் கதை, முதலிரவோடு முடிவடைந்தாலும், அந்த இடைப்பட்ட குறுகிய நேரத்தில் மனித மனங்களை மிக ஆழமாக அலசியுள்ளார் இயக்குநர் ராஜா கருப்புசாமி. காதல் உள்ளிட்ட பல விஷயங்களை மேலோட்டமாகவும், நகைச்சுவையாகவும் பேசியிருந்தாலும் பார்வையாளர்கள் மனதில் அது ஆழமாகப் பதிகிறது. கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் மற்றும் அவர்களிடம் வேலை வாங்கிய விதம் பாராட்டுக்குரியது. ஒரு திருமண வீட்டில் நடக்கும் பாசம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், திடீர் மோதல்களை உண்மைக்கு நெருக்கமான முறையில் காட்சிப்படுத்திய முறை, வழக்கமான கமர்ஷியல் சினிமாவை கடந்த ஒரு நல்ல படைப்பாக இப்படத்தை மாற்றியுள்ளது.
தமிழ் சினிமாவின் கதாநாயகப் பற்றாக்குறையைத் தீர்க்கும் ஒரு புதிய வரவாகக் களம் இறங்கியுள்ளார் நாயகன் ரிஷிகாந்த். ‘மருது’ என்ற எளிய கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில், அமைதியாக இருந்தே தனது முகபாவனைகள் மூலம் உணர்வுகளைக் கடத்தித் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார்.

கதாநாயகியாக நடித்துள்ள அனிஷ்மா அனில்குமார், அழுத்தமான கதாபாத்திரத்தை மிகவும் அசால்டாகக் கையாண்டுள்ளார். படத்தின் முதல் பாதியில் மிகவும் குறைவாகப் பேசும் இவர், இரண்டாம் பாதியில் வசனங்களே இல்லாமல் தனது கண்களாலேயே நடித்து அசத்தியுள்ளார். குறிப்பாக, இறுதிக்காட்சியில் தனக்குள் இருக்கும் மனக்குமுறல்களைக் கொட்டி அவர் அழும் காட்சி தியேட்டரில் கைதட்டல் பெறுகிறது. இவர்களுடன் நடித்துள்ள சேத்தன், பக்ஸ், சங்கீதா பாலன், பானுப்பிரியா, வர்ஷினி கார்மேகம், அப்துல் லீ மற்றும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட அனைவரும் நடிகர்களாக இல்லாமல், நிஜமான கிராமத்து மனிதர்களாகவே வாழ்ந்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சுரேந்தரன் பரஞ்சோதியின் கேமரா, ரசிகர்களுக்கு ஒரு கிராமத்துத் திருமண வீட்டிற்குள் நேரில் சென்று வந்த உணர்வைத் தருகிறது. குறிப்பாக, இரவு நேரக் காட்சிகளை மிகச் சிறப்பாகக் கையாண்டு கவனம் ஈர்க்கிறார். பரத் சங்கரின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது. ஒரு நாளில் நடக்கும் கதையாக இருந்தாலும், நேர்த்தியான முறையில் காட்சிகளைத் தொகுத்து கதையின் இயல்பு தன்மை மாறாமல் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் படத்தொகுப்பாளர் அசோக் அர்ஜுனன். ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும், அனைவர் மீதும் பார்வையாளர்களின் கவனத்தை அவர் கடத்தியுள்ளார்.
‘மொத ராத்திரி’ என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு இது ஏதோ இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த படம் என்று நினைத்துவிட வேண்டாம். தலைப்பு தான் ஒரு மாதிரி இருக்கிறதே தவிர, படம் குடும்பங்கள் உட்பட அனைத்து மாதிரியான மக்களும் ரசித்துப் பார்க்கக்கூடிய ஒரு எதார்த்தமான, கிராமத்துப் படைப்பாகும்!












