துஷ்யந்த் ஜெயபிரகாஷ் , ஜனனி, ஜெயப்பிரகாஷ் , செந்தி குமாரி , சுப்பிரமணிய சிவா , வினோதினி, பிரசன்னா பாலச்சந்திரன், சரத் லோகித்ஷவா, மோகனா, சஞ்சய், கோகுல் , நிகில் , ரோஷன் பஷீர் , அருவி மதன், இயக்குநர் மூர்த்தி, கலையரசன் கண்ணுசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மைதீன். ஒளிப்பதிவு தில்ராஜு. இசை, ஜேம்ஸ் வசந்தன்.
வடசென்னை பகுதியில் வசிக்கும் 3 பெண்களுக்கு ஒரே ஆஸ்பத்திரியில் 3 ஆண் குழந்தைகள் பிறக்கிறது. அப்போது அந்த ஆஸ்பத்திரியில் நடக்கும் சில நிகழ்வுகள், அந்த மூன்று குடும்பத்திற்குள்ளும் நெருக்கமான பந்தத்தை ஏற்படுத்துகிறது. அனைவருமே அடுத்தடுத்த வீடுகளில் வசித்தாலும் கூட்டுக்குடும்பமாகவே இருந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகளும் ஒரே பள்ளியில் படித்து கல்லூரிப்படிப்பை எட்டும் தருவாயில் இருக்கின்றனர். இந்த குடும்பத்தின் தலைவராக இருந்து ஜெயப்பிராகாஷ் வழி நடத்துகிறார். சுப்பிரமணிய சிவா , பிரசன்ன பாலச்சந்திரன் தம்பியைப்போல் இருந்து வருகின்றனர்.
இவர்கள் வசிக்கும் பகுதியின் எம் எல் ஏ சரத் லோகித்ஷவா, கோடி கோடியாக பணத்தை ஒரு கிடங்கில் வைத்து பாதுகாத்து வருகிறார். இவரது கிடங்கிற்குள் ஜெயப்பிராகாஷ், சுப்பிரமணிய சிவா , பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோரது மகன்கள் விளையாடும் போது எதேச்சையாக ஒரு பணப்பெட்டியைப் பார்த்து, அதை வீட்டிற்கு எடுத்து வந்து விடுகின்றனர். பணம் வந்த பிறகு மூவர் குடும்பமும் தனித்தனியாக பிரிகிறது. தனது பணத்தைத் தேடி சரத் லோகித்ஷவா, இவர்கள் வசிக்கும் பகுதிக்கு வருகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் ’ஆல் பாஸ் ’படத்தின் கதை.
‘ஆல் பாஸ்’ திரைப்படம், ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தி கமர்ஷியலாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள், அமெச்சூர்த்தனமாக இருந்தாலும் மிக சாதரணமாக துவங்கும் படம் பின்னர் க்ரைம் த்ரில்லராக தொடங்கி, க்ளைமாக்ஸில் சபாஷ் போட வைக்கிறது.
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஜெயபிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் இயல்பாக நடித்து கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர். செந்திகுமாரி, வினோதினி, மோகனா ஆகியோரும் குறிப்பிடத்தகுந்த அளவில் நடித்துள்ளனர். காதலர்களாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் ஜனனி, சிறுவர்கள் சஞ்சய், கோகுல், நிகில் மற்றும் எம்.எல்.ஏ பாத்திரத்தில் நடித்திருக்கும் சரத் லோகித்ஷவா, கவுன்சிலர் பாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அருவி மதன் உள்ளிட்டோரும் நன்றாகவே நடித்துள்ளனர்.
எழுதி இயக்கியிருக்கும் மைதீன், பாராட்டும்படியான ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தியதற்காக அவரைப்பாராட்டலாம்.
‘ஆல் பாஸ்’ ஓகே தான்!












