‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்து, நிவின் பாலி ,அஞ்சலி, சூரி ஆகியோர் நடித்து, ராம் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழுமலை’. என். கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பொதுவாக ஒரு ஓவியத்தில் மகிழ்ச்சி, சோகம், அமைதி, பயம் உள்ளிட்ட பல உணர்வுகள் இடம் பெற்றிருக்கும். இருந்தாலும் அது வரைந்தவருக்கும், அதை ரசிப்பவருக்கும் வெவ்வேறு ரசனையைக் கொடுக்கும். சிலரது ரசனை சிலருடன் பொருந்திப் போகும். மேலும் ‘மாடர்ன் ஆர்ட்ஸ்’ எனும் நவீன வரை கலையை புரிந்து கொண்டு ரசிப்பதற்கு சவாலாக விளங்கும். அப்படித்தான் இயக்குநர் ராமின் வித்தியாசமான சிந்தனையில், இந்த உலகம் அனைவருக்குமானது. அனைத்து உயிர்களுக்குமானது. என சொல்லும் ‘ஏழு கடல் ஏழுமலை’ திரைப்படம்.
அனைவரும் தீபாவளி கொண்டாடிக்கொண்டிருக்கும் ஒரு மழை நாள் இரவில், வளைகுடா நாட்டில் வேலைசெய்துவிட்டு திரும்பும் சூரி, தனது சொந்த ஊருக்கு ரயிலில் பிரயாணம் செய்கிறார். வெறிச்சோடிக் காணும் அந்த ரயிலில், பார்ப்பவர்கள் மிரளும் தோற்றத்தில் நிவின்பாலியும் பயணிக்கிறார். சூரிக்கு பயம் தொற்றிக் கொள்கிறது. அவரிடமிருந்து விலகும் நேரத்தில் நிவின்பாலி சூரியின் அருகே வந்துவிடுகிறார். இவர்கள் பயணம் செய்யும் ரயிலில் ஒரு எலி வசிக்கிறதுளந்த எலி சூரியால் துன்புறுத்தப்படும் சமயத்தில், அதை விடுவித்து சூரியை தனது கட்டுப்பாடில் கொண்டுவருகிறார், நிவின்பாலி. இப்போது இருவருக்குமான உரையாடலில், அதில், மற்ற உயிரினங்கள் மனிதனிடம் கேள்விகள் கேட்பதாகவும், பல ஆயிரம் வருடங்களாக காதலி அஞ்சலியை தேடிச்செல்வதையும் விவரிக்கிறார் நிவின்பாலி. இது தான் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் கதை.

சுமார் 8000 வருடங்களாக சாகாவரம் பெற்ற கதாபாத்திரத்தில் நீண்ட தலைமுடியுடனும், தாடியுடனும் நடித்திருக்கிறார், நிவின்பாலி. அந்தக் கதாபாத்திரம் அவருக்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறது. அவர் காட்டும் காதல், அன்பு, கோபம், உபதேசம் போன்றவற்றிற்கு தலையாட்டும் சாமனியனின் கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார். நிவின்பாலியிடம் இருந்து தப்பிக்கப்போராடும் காட்சிகளிலும், ரசிக்கும்படி நடித்திருந்தாலும் சில காட்சிகளில் அதீத நடிப்பினை வெளிப்படுத்துகிறார். 1000 ஆண்டுக்கொருமுறை பிறவி எடுக்கும் அஞ்சலியும் தேவதையாக வந்து போகிறார். இவருக்கும் நிவின்பாலிக்குமிடையேயான காட்சிகள் ரசிக்கவே செய்கின்றன.
மழை பெய்யும் இரவினில் ஒரு ரயிலுக்குள்ளேயே முக்கால் வாசிப்படமும் நிகழ்கிறது. காடு, கடற்கரை, பாலைவனம் என ஏகப்பட்ட ஏஐ காட்சிகள். அது, ராமின் அதீத கற்பனைக்கு நிறைந்த பயனை தந்துள்ளது. நிவின்பாலிக்கும், சூரிக்கும் ரயிலில் நடக்கும் அந்தக் காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரம். குறிப்பாக சண்டைக்காட்சிகளை.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில், ‘ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி.. எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி..,’ என்ற பாடல், மறுபடியும் கேட்கத்தூண்டும் வகையில் இருக்கிறது. அவருடைய காட்சிக்களுக்கேற்ற பின்னணி இசையும் ரசனையை மேம்படுத்துகிறது. கூடுதல் பின்னணி இசையமைத்திருக்கிறார், சந்தோஷ் தயாநிதி.
ஒவ்வொரு படத்திலும் இயக்குநர் ராம் தான் கூற விரும்பும் கருத்துக்கள் அனைத்தையும் இந்தப்படத்திலும் கூறியிருக்கிறார். ஆனால், முன்னெப்போதும் கூறாத வித்தியாசமான திரைக்கதையின் மூலம்!
‘ஏழு கடல் ஏழுமலை’ – மாறுபட்ட ரசனைக்கு!












