ஃபகத் ஃபாசில், குழந்தை நட்சத்திரம் சாரா பாலேகர், மகேஷ் மஞ்ச்ரேக்கர், சௌரப் சச்தேவா , வெங்கடேஷ் காகுமானு, சுப்பராஜு , திவ்யா பிள்ளை, எஸ். ஷஷாங்க் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷஷாங்க் யேலேட்டி எழுதி இயக்கியுள்ளார். இசை, கால பைரவா. ஒளிப்பதிவு, பிராட் பிரான்சிஸ்.
பணம் மட்டுமே பிரதானம் என நினைக்கும் ஃபகத் ஃபாஸில் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர். பணத்திற்காக எந்த மோசடியையும் செய்பவர். வட்டித்தொழில் செய்து வருபவர் தாதா மகேஷ் மஞ்ச்ரேக்கர். இவர் நடத்தும் ஆட்டுக்கிடா சண்டையில் மோசடியாக வெற்றி பெறுகிறார், ஃபகத் ஃபாஸில். அது, மகேஷ் மஞ்ச்ரேக்கருக்கு தெரிய வர, அவரிடம் வசமாக சிக்கிக்கொள்கிறார். தன்னை விடுவிக்கும்படி கெஞ்சும் ஃபகத் ஃபாஸில் அதற்கு 25 லட்சத்தை 2 நாட்களில் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். இதனால், சிறுமி சாரா பாலேகரை கடத்தி அதன் மூலம் பணம் பறிக்க முயற்சிக்கிறார். சிறுமி இறந்தது தெரியாமல் அவளின் உறவினர் போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். ஃபகத் ஃபாஸிலுக்கு சில நாட்கள் கழித்து சாரா, ஒரு ஆத்மா என தெரிய வருகிறது. இருந்தும், அந்த ஆத்மா மூலம் மகேஷ் மஞ்ச்ரேக்கரை மிரட்ட திட்டமிடுகிறார். சிறுமியை கடத்தியதற்காக போலீஸ் ஃபகத் ஃபாஸிலை தேடுகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள்‘ படத்தின் கதை.
ஒரு மோசடிப்பேர்வழிக்கும்ஓரு சிறுமிக்கும் இடையே உருவாகும் அன்பை அழகாக விவரிக்கிறார், இயக்குநர் ஷஷாங்க் யேலேட்டி. ஃபஹத் ஃபாசில் தனது கதாபாத்திரத்திற்கேற்றபடி குறை சொல்ல முடியாத நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். போலீஸில் மாட்டிக்கொண்டு அடிவாங்கும் காட்சியில், சாரா தனக்காக அழுவதை எண்ணி உருகும் காட்சியிலும், க்ளைமாக்ஸ் காட்சியில் சாராவின் உடலை பார்த்து அழும் காட்சியிலும் ரசிகர்களை கலங்கடித்து விடுகிறார். இவருக்கு நிகராக சிறுமி சாராவும் சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளார். இவர்களுடைய காட்சிகள் அனைத்தும் சிறுவர், சிறுமியர் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இவர்களுடனே வரும் நாயும் சிறுவர்களை கவரும். ஒளிப்பதிவும், இசையும் படத்தின் பலமாக இருக்கிறது.
‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ குழந்தைகளுக்கான படமாக, ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.












