பொதுவாக கச்சா எண்ணெயைத்தான் ‘கருப்பு தங்கம்’ என்று அழைப்பார்கள். ஆனால், நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் தலைமுடிக்கும் தங்கத்திற்கு இணையான மதிப்பு இருப்பதையும், அதன் பின்னணியில் நடக்கும் பல கோடி ரூபாய் வர்த்தகத்தையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படமே ‘பிளாக் கோல்டு’.
கார் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் தலைமை மெக்கானிக்காகப் பணியாற்றும் வெற்றி, தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். கூடவே, தனது கல்லூரித் தோழியான பிரியலயாவையும் காதலிக்கிறார். எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கும் வேளையில், லாரி ஓட்டுநரான வெற்றியின் தந்தை லிவிங்ஸ்டன், ரூ.5 கோடி மதிப்புள்ள சரக்குடன் ஆந்திராவிலிருந்து சென்னை திரும்பும் வழியில் திடீரென மாயமாகிறார். லாரியுடன் சரக்கும் காணாமல் போனதால், முதலாளி லிவிங்ஸ்டன் மீது திருட்டுப் பழி சுமத்துகிறார். காணாமல் போன தந்தையைக் கண்டுபிடிக்கவும், அவர் மீதான களங்கத்தைத் துடைக்கவும் களத்தில் இறங்குகிறார் வெற்றி. ஒருபுறம் காவல்துறை அதிகாரி அபிராமி வெங்கடாச்சலம் தீவிர விசாரணை நடத்த, மறுபுறம் தன் தேடலைத் தொடங்கும் வெற்றிக்கு ‘கருப்பு தங்கம்’ குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவருகின்றன. அது என்ன, அதற்கும் அவரது தந்தை மாயமானதற்கும் என்ன தொடர்பு என்பதை விறுவிறுப்பான கிரைம் ஆக்ஷன் திரில்லராகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தீரன் அருண்குமார்.
இறுக்கமான முகத்துடன், தான் எடுத்துக்கொண்ட பணியில் தீவிரமாகவும் தீர்க்கமாகவும் பயணிக்கும் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார் நாயகன் வெற்றி. காதல் காட்சிகளில் வழக்கம் போல் சற்றுத் தடுமாறினாலும், தந்தைக்காகக் கலங்குவதிலும் அவரைத் தேடும் தீவிரத்திலும் அசத்தி, படத்தைத் தன் தோளில் சுமந்துள்ளார். நாயகி பிரியலயாவுக்குக் குறைவான காட்சிகளே என்றாலும், இன்னும் சற்று நேரம் திரையில் தோன்றியிருக்கலாமே என்று ஏங்க வைக்கும் அளவுக்கு அழகாக வந்து போகிறார். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அபிராமி வெங்கடாச்சலம், காக்கி உடைக்கே உரிய கம்பீரத்துடன் வலம் வருகிறார். நாயகனின் தந்தையாக லிவிங்ஸ்டன் தனது எதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்க்க, அம்மாவாக நடித்திருக்கும் துளசி தனது அனுபவ நடிப்பால் திரைக்கதைக்குப் பலம் சேர்த்துள்ளார். இவர்களுடன் நைனாவாக அருள் டி.சங்கர், தங்கம் எக்ஸ்போர்ட்ஸ் முதலாளியாக ஏ. வெங்கடேஷ், சபிதா ராய், ராமர், கராத்தே வெங்கடேஷ் என அனைவரும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர்.
உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து, தலைமுடி வர்த்தகம் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் தொழில் போட்டிகளைக் கற்பனை கலந்து சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தீரன் அருண்குமார்.
மொத்தத்தில் பரவாயில்லை!












