‘சிக்னல் அட் 11.30’ – விமர்சனம்!
இரவு நேரப் பயணங்கள் எப்போதுமே ஒருவித மர்மத்தையும் எதிர்பார்ப்பையும் உள்ளடக்கியவை. அந்த வகையில், நள்ளிரவு 11.30 மணிக்கு ஒரு போக்குவரத்து சிக்னலில் நிகழும் ஒற்றைச் சம்பவத்தை மையப்புள்ளியாகக் கொண்டு, ஒரு விறுவிறுப்பான உளவியல் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கிறது ‘சிக்னல் அட் 11.30’. மலர்விழி நடேசன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை, அவரே ஷிவானி சுப்பிரமணியுடன் இணைந்து அலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
இரவில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார் நாயகன் சந்தோஷ் பிரதாப். சரியாக இரவு 11.30 மணியளவில் ஒரு சிக்னலில் காத்திருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் செல்லும் இளம்பெண் ஒருவரை சில இளைஞர்கள் துரத்திச் செல்வதை அவர் கவனிக்கிறார். மனிதநேய அடிப்படையில் அவர்களைப் பின்தொடர்ந்து செல்லும் சந்தோஷ் பிரதாப், ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணின் வாகனத்தை மட்டும் அநாதையாகப் பார்க்கிறார். சுற்றிலும் தேடியும் அப்பெண் கிடைக்காததால், உடனடியாகக் காவல் நிலையத்திற்குச் சென்று தான் பார்த்த விவரங்களைத் தெரிவிக்கிறார். மறுபுறம், வேலைக்குச் சென்ற தன் மகள் பவ்யா திரிகா விடிந்தும் வீடு திரும்பாததால் பதறிப்போகும் தந்தை ஜெயப்பிரகாஷ், காவல்துறையின் உதவியை நாடுகிறார். காவல்துறை ஒருபக்கம் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்க, காணாமல் போன பவ்யா திரிகாவிற்கு என்ன என்ற கேள்விக்கு அடுத்தடுத்த திருப்பங்களுடன் விடை சொல்கிறது திரைக்கதை.
படத்தின் மிகப்பெரிய பலம் சந்தோஷ் பிரதாப்பின் முதிர்ச்சியான நடிப்பு. நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதத்தைக் கண்டு பதற்றமடையும் சாமானியனாகவும், கதையின் உண்மை முகம் வெளிப்பட்ட பிறகு வேறொரு பரிமாணத்தைக் காட்டும் நபராகவும் இரண்டு வேறுபட்ட உணர்வுகளை மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். வழக்கமான கதாநாயகிகளைப் போலப் பாடல்களுக்கு மட்டும் வந்து போகாமல், இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும் அழுத்தமான கதாபாத்திரத்தை மிகையில்லாமல், இயல்பான நடிப்பால் கையாண்டு கவனம் ஈர்க்கிறார் பவ்யா திரிகா. மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பூஜிதா பொன்னாடா, காதல் மற்றும் பாடல் காட்சிகளுக்குப் பயன்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல், கதையின் போக்கை மாற்றும் ஒரு முக்கியத் திருப்பத்திற்கும் காரணமாக அமைந்திருக்கிறார். தந்தையாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ் மற்றும் காவல்துறை அதிகாரிகளாக வரும் நடிகர்கள், முனிஷ்காந்த் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களைக் குறையின்றிச் செய்து கதைக்குப் பலம் சேர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜியின் உழைப்பு திரையில் பளிச்சிடுகிறது. இரவு நேரத்தின் மர்மமான அமைதியையும், கதாபாத்திரங்களின் நுணுக்கமான முகபாவனைகளையும் மிகத் துல்லியமாகப் பதிவு செய்து படத்திற்குப் பெரிய தரத்தைக் கொடுத்திருக்கிறார். டி. இமானின் பின்னணி இசை, காட்சிகளின் தீவிரத்தைக் கெடுக்காமல் திரைக்கதையின் ஓட்டத்திற்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறது. உளவியல் ரீதியான சிக்கல்கள் நிறைந்த ஒரு கதையை, பார்வையாளர்களுக்கு எந்தவிதக் குழப்பமும் ஏற்படாத வகையில் நேர்த்தியாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன்.
ஒட்டுமொத்தத்தில், ஒரு சாதாரண இரவு நேரச் சம்பவத்தை எடுத்துக்கொண்டு, அதை யூகிக்க முடியாத திருப்பங்களுடன் கூடிய உளவியல் திரில்லராக மாற்ற முயற்சித்திருக்கும் இயக்குநர் மலர்விழி நடேசனின் கதை சொல்லல் பாராட்டுக்குரியது. சில இடங்களில் கமர்ஷியல் சமரசங்கள் தென்பட்டாலும், விறுவிறுப்பான திரைக்கதையும், நடிகர்களின் யதார்த்தமான நடிப்பும் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தை ஒருமுறை நிச்சயம் பார்க்கக்கூடிய சுவாரசியமான திரில்லர் அனுபவமாக மாற்றியுள்ளது.