
ஒரே திரையில் இரண்டு படங்களை காட்ட முடியுமா?
“முடியும்யா ..”என்று காட்டிவிட்டார் ஜெகன் விஜயா.ஒரு கதையை சரி பாதியாக பிரித்து கதையோட்டத்துக்கு தடை ஏற்படாமல் இரண்டு காட்சிகளை காட்டியிருக்கிறார்கள். விழிகளை துன்புறுத்தாமல் கோர்வையுடன் செல்வதற்கு ஒளிப்பதிவாளர் வீரக்குமார் பதிவு செய்திருக்கிறார்.எடிட்டர் சி.எஸ்.பிரேம் குமார் கச்சிதமாக தொகுத்திருக்கிறார்.
அடுத்தடுத்து வருகின்ற காட்சிகளை பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இது புதிய அனுபவம்.
வினோத் கிஷனின் ஸ்பெஷல் சைல்ட் கேரக்டர்தான் மையப்புள்ளி.அவரை வைத்து கிரைம் ஸ்டோரியை திறம்பட சொல்லியிருக்கிறார்கள். சிரமமான கேரக்டர். முழுமையான அர்ப்பணிப்பு இல்லாமல் செய்திருக்க முடியாது. வாழ்த்துகள் வினோத் கிஷன்.
யாரையும் நம்பி பெண்கள் தனியாக செல்லக்கூடாது.பழக்கப்பட்டவனாக இருந்தாலும் கூட. என்பதை பாலியல் வன்முறை வழியாக சொல்வதற்கு கவுரி கிஷன் பயன்பட்டிருக்கிறார். தனக்கு மட்டுமே கால்கள் அகட்டப்பட வேண்டும் என்கிற ஆண் வன்மத்துக்கு இரையாகிய கொடூரத்தை பார்வையாலேயே உணர்த்தி விடுகிறார்.
கழுத்தறுக்கும் சச்சின், அவரை நம்பி ஏமாறும் மகேந்திரன், சுருளி,லகுபரன் மற்றும் ஒரு சில காட்சிகளில் வருகிற ரோகிணி, பாலா ஆகிய அனைவரும் மிகப்பொருத்தம்.
மக்களின் ரசனை என்னவாக இருக்கும் என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும்.












