முன்னாள் அமைச்சரின் மகன் அவனுடைய காதலியுடன் காட்டுக்குள் சென்றபோது இருவரும் கடத்தப் படுகிறார்கள் . காட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஜித்தன் ரமேஷ்தான் காதலர்களை கடத்திய காட்டுவாசி.. அவர் ஏன் கடத்தினார்,எதற்காக கொடுமைப்படுத்துகிறார், காதலர்கள் மீட்கப்பட்டார்களா என்பதுதான் கதை . எப்படி இருக்கிறது படம்?
பார்க்கலாம் .
அகில்பிரபாகர், அஞ்சு இருவரும் காதலர்கள்.. மாஜி மந்திரி ஹரிஸ் பெராடியின் புத்திரன்தான் அகில் பிரபாகர். இவரின் காதலியாக அஞ்சு . முன்னாள் அமைச்சரின் மகன் அகில் என்பதால் போலீசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட ,அவர்கள் தேடுதலில் தீவிரம் இருக்கிறது. அதிகாரியை விட கான்ஸ்டபிள் அருவி மதன் தான் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்.
மாஜி அமைச்சரின் மகன் வேட்டையாடப்படுகிறார் என்றால் ஆட்சி காலத்தில் அவர் வில்லங்கமாக ஏதோ பண்ணியிருக்கிறார் என்பதுதானே காரணமாக இருக்கும். செவ்வனே காட்டியிருக்கிறார்கள்.
ஜித்தன் ரமேஷ் மேக்கப் முரட்டுத்தனமாக இருக்கிறது. அம்மாஞ்சி முகத்தை கொடூரமாக மாற்றம் செய்ததில் பலன் இருக்கிறது. அவரது நடிப்பில் வியக்கத்தக்க மாறுதல் . பலே பாண்டியா !
பொதுவாக காட்டுக்குள் இத்துப்போன பேய் மாளிகையில்தான் எல்லா அராஜங்களும் நடக்கும்.ஆனால் இந்தப்படத்தில் பாதாள குகையில் தான் புத்திசாலித்தனத்தை காட்டியிருக்கிறார்கள். ஆர்ட் டைரக்டரை தாராளமாக பாராட்டலாம். ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவம் காட்சிகளில் திகிலை குழைத்து அடித்திருக்கிறார். சூப்பரப்பு !
இப்பட நாயகி அஞ்சுவை காட்டிலும் சேற்றிலும் புரட்டி அடித்திருக்கிறார்கள்.பாவம் என்றாலும் நடிப்பது அசல் !
ஹரிஷ்பெரேடி. அமர் இராமச்சந்திரன், அருவிமதன் மூவரும் நேர்த்தி.
இசையமைப்பாளர் அவுசப்பச்சன், தேவையான அளவுக்கு உழைத்தருக்கிறார்.
அபிலாஷ் ஜி.தேவன் எழுதி இயக்கியிருக்கிறார். கொட்டாவி விடாத அளவுக்கு ஓட்டம் இருக்கிறது.
–-தேவிமணி












