‘பெஸ்ட் மூவிஸ்’ சார்பில், தன சண்முகமணி தயாரித்து, ஷாம், நிரா, நிழல்கள் ரவி, அருண் டி சங்கர், ஜீவா ரவி, ஜே ஆர் மார்டின் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் படம், அஸ்திரம்.
அஸ்திரம் படத்தினை எழுதி, இயக்கியிருக்கும் அரவிந்த்ராஜ் கோபால், ஜப்பான் நாட்டில், ஒரு மன்னனின் வாழ்க்கையில் நடந்ததாக கூறப்படும் கதையைக் கொண்டு, மெஸ்மரிசம், உளவியல் ரீதியான, விறுவிறுப்பான மற்றும் சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்.
மலை பிரதேசமான கொடைக்கானல் பின்னணியில் கதை நகர்கிறது. சில இளைஞர்கள் தொடர்ச்சியாக தங்களது வயிற்றைக்கிழித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்களுக்கிடையே எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் இருப்பதால், போலீசார் துப்புக் கிடைக்காமல் திணறி வருகின்றனர். இருந்தும் போலீஸ் அதிகாரி ஷாமின் தீவிர புலாணய்வின் மூலம், பல திடுக்கிடும் விஷயங்கள் வெளிவருகிறது. அவை என்ன? என்பதை பரபரப்பூட்டும் திரைக்கதையில் விவரிக்கிறார், இயக்குநர் அரவிந்த்ராஜ் கோபால்.
அகிலன் என்கிற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக, ஷாம் கம்பீரமாக வலம வருகிறார். அவருக்கான கதாபாத்திர வடிவமைப்பும் அவரிடம் வேண்டிய நடிப்பினை பெற்றும், நடிகர் ஷாமை வைத்து என்ன செய்ய வேண்டுமோ, அதை இயக்குநர் செய்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கிறார், நிரா. அவருக்கு நடிக்க பெரிதாக வாய்ப்பில்லை. கிடைத்த காட்சிகளில் ஓகேவாக நடித்திருக்கிறார்.
சுமந்த் என்ற கதாபாத்திரத்தில் காவலராக நடித்தவர் கவனம் ஈர்க்கிறார்.
மனநல மருத்துவராக நிழல்கள் ரவி, காவல் துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜே.ஆர்.மார்டின் ஆகியோர், தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே. சில காட்சிகளில் திகிலூட்டுகிறது.
கல்யாண் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.
உளவியல் சார்ந்த, மனிதர்களின் மனங்களை வசீகரித்து அதன் மூலம் சாதிப்பது என, பல விஷயங்களின் மூலம் திகிலூட்டியிருக்கிறது, அஸ்திரம்.













