தமிழ்த்திரையுலகில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படத்தை தொடர்ந்து ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.இதையடுத்து தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ரசிகர்களின் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறது. இதில் ‘பிரேமலு’ மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தின் மூலம் சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. பிரதீப் ரங்கநாதன் இடம் பெறும் முதல் காட்சி படமாக்கப்பட்டது.இந்த படம் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட் சார்ந்து ஒரு நியூ ஏஜ் கதையாக இருக்கும் என்கிறது படக்குழு. இப்படத்தின் ஒளிப்பதிவை நிகேத் பொம்மி கவனிக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.













